பக்கம்:ஓ மனிதா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கழுதை கேட்கிறது

19

போர்த்துவதாயிருந்தால் அவளுக்கல்லவா போர்த்த வேண்டும்? பொற்கிழி அளிப்பதாயிருந்தால் அவளுக்கல்லவா அளிக்கவேண்டும்? சிலை எடுப்பதாயிருந்தால் அவளுக்கல்லவா எடுக்க வேண்டும்?

எங்கே செய்கிறார்கள்? அவர்களுக்குத்தான் அவர்களுக்கு அவர்களே பாராட்டு விழா நடத்திக் கொள்ள, அவர்களுக்கு அவர்களே பொன்னாடை போர்த்திக் கொள்ள, அவர்களுக்கு அவர்களே பொற்கிழி அளித்துக் கொள்ள, அவர்களுக்கு அவர்களே சிலை எடுத்துக் கொள்ளவே நேரம் போத மாட்டேன் என்கிறதே!

நான் வசிக்கும் தெருவில் ஓர் அதிகாரி இருக்கிறார். அவர் கண்ணில் ஒரு மாட்டு வண்டி பட்டுவிட்டால் போதும், ஓடோடி வந்து வண்டியை நிறுத்தி நுகத்தடியைத் தூக்கிப் பார்ப்பார்; மாட்டின் கழுத்தில் புண்ணிருந்தால் உடனே அந்த வண்டிக்காரன் மேல் வழக்குப் போடுவார்; நீதிமன்றத்தில் அவனை அபராதம் கட்ட வைப்பார். இந்த ஜீவகாருண்ய சேவையை அவர் மனிதாபிமானத்துக்காகச் செய்வதாக நீங்கள் நினைத்துவிடப்போகிறீர்கள், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்ன இருந்தாலும் அவரும் உங்களைப் போன்ற மனிதரல்லவா? சர்க்காரிடம் சம்பளம்வாங்கிக் கொண்டே அந்தச் சேவையைச் செய்து வருகிறார்!

இத்தகையவர் பொழுது விடிந்தால் போதும், ஜன்னல் வழியாக வந்து விழும் செய்திப் பத்திரிகையை எடுத்துப் பிரிப்பார்; கிழக்கு வங்கத்தில் பத்து ‘லட்சம் பேர் சாவு’ என்று ‘உற்சாக’மாகப் படிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/20&oldid=1370262" இலிருந்து மீள்விக்கப்பட்டது