பக்கம்:ஓ மனிதா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொக்கு கேட்கிறது

37

‘நாளைக்கு வாருங்கள், சாப்பிடுவோம்’ என்று நரியை அழைத்ததாம். நரியும் ‘சரி, வருகிறேன்’ என்று கொக்கின் வீட்டுக்குப் போயிற்றாம், அங்கே குறுகிய வாயுள்ள இரண்டு கூஜாக்களில் அப்பளத்தை போட்டு வைத்துவிட்டு, ‘ம், நடக்கட்டும்’ என்றதாம் கொக்கு. கூஜாவுக்குள் வாயைவிட முடியாமல் நரி விழிக்க, கொக்கு தன் நீண்ட மூக்கால் ஒரே நிமிடத்தில் கூஜாவைக் காலி செய்துவிட்டு, ‘எப்படி நம்ம வீட்டு அப்பளம்?’ என்று நரியைக் கேட்டதாம். தனக்கு நேர்ந்த அவமானத்தை அது வெளியே காட்டிக் கொள்ளாமல் ‘பிரமாதம்’ என்று சொல்லிவிட்டு வந்ததாம்.

நீதி:

‘சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் வளர்ப்பதற்காக இயேசு பிரான் சிலுவை ஏறினால் என்ன, மகாத்மா காந்தி குண்டுகளுக்கு இரையானால் என்ன? நீ பழிக்குப் பழி வாங்குவதை விடாதே!

இப்படிப் பல கதைகள்; எல்லாம் என் மூக்கை வைத்துத்தான்!—இந்த மூக்கின் சிறப்பைத் தவிர வேறொரு சிறப்பும் இல்லையா, என்னிடம்?—உண்டு; அதைக் கண்டவள் அவ்வை. கண்டதோடு இல்லை; சொன்னவளும் அவ்வை என்ன சொன்னாள்?–இந்த அவசர யுகத்தில் அதை நினைத்துப் பார்க்க உங்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது! நீங்கள் தான் ‘அவசரமாகப் போக வேண்டும்’ என்பதற்காக ஓடும் பஸ்ஸில் ஏறிக் கீழே விழுந்து, ஆபீசுக்குப் போவதற்குப் பதிலாக ஆஸ்பத்திரிக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/38&oldid=1370748" இலிருந்து மீள்விக்கப்பட்டது