பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

ஔவையார் தனிப்பாடல்கள்



இந்த அதியமானுக்கும் ஒளவையாருக்கும் நெருக்கமான பெரு நட்பு ஏற்பட்டிருந்தது. அதியமானின் பேராற்றலையும் பெருந்தன்மைகளையும் கண்டு வியந்து, அந்த வியப்பின் பயனாக அவனுடனேயே நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர் ஒளவையார் எனலாம்.

ஒரு சமயம் பகைவர்கள் சிலர் அதியமானை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்று சதி செய்யத் தொடங்கினர். சேரர் கோமகனான பெருஞ்சேரல் இரும்பொறையும் அதியமானை அழிப்பதற்கான காலத்தை எதிர்நோக்கியபடியே காத்திருந்தான். பகைவரின் சதிச் செயல்களில் அவன் நேரடியாகக் கலந்து கொள்ளாவிட்டாலும், அவனுடைய மனப்பூர்வமான ஆதரவு அவர்கட்கு இருந்தது. அதனால் சதிகாரர்களுக்கு துணிவும் வலிமையும் அதிகமாயின.

“அதியன் சில போர்களில் எதிரிகளை வென்றிருக்கலாம். நிலைமை அவனுக்கு சாதகமாக அவ்வேளையிலே இருந்திருக்கக் கூடும். எதிரிட்டு நின்றவரிடையே உள்ளத் துணிவும் உரமான உணர்வும் குன்றிப்போயிருத்தலும் கூடும். ஆனால், நாம் நினைத்தால், அதியமானை அழிப்பது என்பது மிகவும் எளிது.” இப்படி, ஒரு குறுநிலத்தான் வீராவேசமாகப் பேசினான்.

அவன் பேச்சைக் கேட்டதும், அந்தச் சதிகார அவை ஆரவாரித்தது. சிலர் மட்டுமே அந்தக் கருத்தை ஆதரிக்கத் தயங்கினார்கள். எதிரிகளின் கூட்டத்தைக் கண்டதும், ஏற்பட்ட உற்சாகத்தினாலே அப்படிச் சொன்னவர்கள்தாம் ஆதரித்தவர்களுள் பலர் ஆவர். அவர்களுடைய உள்ளார்ந்த மனத்தின் அடித்தளத்திலே அதியனை நினைத்தபோது எழுந்த பேரச்சம், இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்கு முன் பசகவே அவர்களின் உடலை நடுநடுங்கச் செய்தது.

“அதியன் மாவீரன்; அவனோடு நாம் கொண்ட பகையுணர்வு, அவன் நமக்குச் செய்த தீங்கினாலே ஏற்பட்டதன்று. அவனுடைய வளர்ந்துவரும் புகழைக் கேட்கக் கேட்க, நம் உள்ளத்திலே எழுந்து பெருகிய பொறாமை உணர்வினாலே ஏற்பட்டதே நம்முடைய பகைமை. ஆகவே, நம் பகைமையும் சினமும் நம்மைக் கவிய, அதனால் அறிவிழந்து, எந்தப் பேச்சையும் துடுக்காகப் பேசுதல் கூடாது.அதியனின் ஒற்றர்கள் இப்படிப்பட்ட சதி வேலையில் நாம் ஈடுபட்டிருக்கும் செய்தியை அவனிடம் தெரிவித்தனராயின், அடுத்த கணமே, நாடாளும் நாம் வானாளும் பேற்றைப் பெற்றுவிடுவோம்' இப்படி உண்மையினைத் தெளிவாக எடுத்துக் கூறினான் ஒருவன்.