பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

133



அவனுடைய பேச்சு நியாயமானது. அந்தச் சினங்கொண்ட கூட்டத்தினரிடையே அது எடுபடவில்லை. அவர்கள், தாம் கொண்டதே முற்றவும் சரியென்று நம்பினார்கள்.

"இவன் ஒரு கோழை; அதியனின் அந்தரங்கக் கையாள்!” என்ற குரல்களை அவர்கள் எழுப்பினார்கள்.

“எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அதைப்பற்றி எல்லாம் நான் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உங்கட்குச் சொல்லுவேன். அதியனோடு நெருங்கிப் பழகி அவனையும் அவனுடைய படைவலுவையும் நன்றாக அறிந்தவன் நான். அதனால் உங்களுடைய அவசரக் கோலத்தைக் கண்டதும், பின் வரப்போகின்ற விளைவுகளைக் குறிப்பிட்டு உங்களை எச்சரித்தேன். என் கருத்து உங்கட்கு ஏற்பதாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலம் என் கருத்தே சரியானது என்பதைக் காட்டும்” என்று சொல்லியவனாக, அவன் அந்தக் கூட்டத்தினின்றும் வெளியேறினான்.

வெளியேறியவன், தன் நாட்டை நோக்கி மிகவும் விரைவாகச் சென்று கொண்டிருந்தான். இடைவழியிலே ஒளவையார் அவனுக்கு எதிராக வந்து கொண்டிருந்தார். அவர் அதியனுக்கு மிகவும் வேண்டியவர் என்பதை அவன் நன்றாக அறிவான். அறிந்தாலும், அவருடைய தமிழ் நலத்தினை மதிப்பதற்கு அவன் என்றும் தவறினவன் அல்லன்!

"அம்மையே! இந்தப் பக்கமாகத் தாங்கள் ஏகுவது எதற்காகவோ" என்று மிகப் பணிவுடன் அவன் கேட்க, ஒளவையாரும், “சிற்றரசர் பலரும் அடுத்த சிற்றுாரில் கூடியிருப்பதாகக் கேள்வியுற்றேன். அனைவரையும் ஒருங்கே காண்பதற்கு நல்லதொரு வாய்ப்பாயிற்றே என்றும் நினைத்தேன். அதனால் புறப்பட்டு விட்டேன்” என்றார்.

ஒளவையாருக்கும் அதியமானுக்கும் இடையேயுள்ள நெருக்கமான பிணிப்பை அவன் அறிவானாதலால், அதியனுக்கு எதிராகச் சதி செய்வதைக் கருதிக் கூடியிருக்கும் அரசர் கூட்டத்திலே ஒளவையார் செல்வது, அவருக்கே ஒருசமயம் இடையூறாதலும் கூடுமெனக் கருதி, அச்சம் அடைந்தான். அந்த அச்சத்தை அவன் முகம் தெளிவாகக் காட்டினாலும், அவன் வாய் வெளியிட விரும்பாதிருந்ததையும் ஒளவையார் கண்டார்.

“ஏனப்பா உன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் நிழலாடுகின்றனவே! அவற்றால் நீ குழம்புவதையும் நான் அறிகின்றேனே! அதனை வெளிப்பட உரைத்தால், யானும் கேட்டு, நினக்குச் சில அறவுரைகளைக் கூறலாம் அன்றோ?" என்றார் அவர்.