பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

3



2. குதிரையும் கிழவியும்

ஒளவையார் சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மனங்கனிந்து வழிபட்டு வந்ததுடன், அவருடைய மூத்த குமாரரான பிள்ளையார்ப் பெருமானையும் பூசித்து வந்தார். விநாயகரைப் பூசிக்கும்போது, தம்மையும் மறந்து, தியானத்தில் முற்றவும் ஈடுபட்டு விடுவது, இவரது இயல்பாக இருந்தது.

ஒருநாள், ஒளவையார் விநாயக பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சேரமான் பெருமாளும் சுந்தரரும் கயிலாயம் செல்லப் புறப்படும் செய்தி அவருக்கு கிடைத்தது.

ஒளவையாருக்குத் தாமும் அவர்களுடன் கயிலாயம் போக வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. பூசையை விரைவாக முடித்துவிட்டுத் தாமும் அவர்களுடன் சென்று பயணத்தில் கலந்துகொள்ள எண்ணினார். அந்த எண்ணத்தால், பூசையை விரைவாகச் செய்யவும் தொடங்கினார்.

ஒளவையாரின் எண்ணத்தை அறிந்து கொண்டான் விநாயகப் பெருமான். 'ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம் அவர்களுக்கு முன்னதாக நின்னைக் கயிலாயத்திற்சேர்த்துவிடுகின்றேன். நீ வழக்கம் போலவே நின் பூசையைச் செய்க' என்றான்.

ஒளவையாரும் விநாயகப் பெருமானின் ஆணைப்படியே நடந்துகொண்டார்.பூசை முடிவுபெற்றது.விநாயகப்பெருமானின் அருளினை நினைந்து ஒளவையார் அகமகிழ்ந்தார்! 'சீதக்களபம்' என்னும் அகவலைப் பாடி, அப் பெருமானை மனங்கனிந்து துதித்துப் போற்றினார்.

தமிழ் உவக்கும் பிள்ளையார்ப் பெருமானின் உள்ளமும் அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தது. அவன் தன்னுடைய பேருருவை எடுத்து நின்றான். வானகம்வரை உயர்ந்து நின்றது அவன் திருமுடி; பாதலம் வரை சென்று நின்றன பாதங்கள், உலகெங்குங்கும் வியாபித்தது அவன் திருமேனி. ஒளவையார் அந்தத் தெய்வக்காட்சியிலே சித்தம் கலந்து மகிழ்ந்தார். வாக்களித்தபடியே அவரைத் தன் துதிக்கையால் எடுத்துக் கைலாயத்திற் சேர்த்து விட்டான் அந்தப் பெருமான்.

சேரமான் பெருமாள் அழகிய குதிரைமீது சென்று கொண்டிருந்தார். சுந்தரமூர்த்திகள் யானையின் மீதமர்ந்து சென்று கொண்டிருந்தார். இருவரும் வழியனைத்தும் கடந்து கைலை சென்று சேர்ந்தனர். தம்முடன் ஒளவையாரும் வந்தனரில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்குள்ளே இருந்தது.