பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

ஔவையார் தனிப்பாடல்கள்



நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

இப்படி வாழ்த்துகின்றார் ஒளவையார். நிலவுலகத்தே ஆடவரின் பொறுப்பு எத்துணை முதன்மையானது என்பதையும் இது நன்றாகப் புலப்படுத்தும்.

112. புகழ் சாகாது!

ஒளவையார் இந் நாளிலே நம்மிடையே இல்லை. அவருடைய பருவுடல் அழிந்துவிட்டபோதும், அவருடைய உயிர்ப்பான செய்யுட்கள் பலவும் நம்மிடையே நிலவுகின்றன. அவற்றை படிக்கும் நாம் அவரை நினைக்கின்றோம். அவர் வாயாற் பாடவும், நாம் கேட்கவுமாக ஒரு மனக்காட்சியே நம்பால் உண்டாகின்றது. புகழால் அவர் என்றும் வாழ்கின்றார்.

வாழ்வு இரு நிலையது. ஒன்று, பிறந்தவன் உண்டும் உடுத்தும் மணந்தும் பெற்றும் வாழ்ந்து மறைந்து போவது. இது நல்ல வாழ்வெனக் கூறுதற்கு உரியதன்று. மற்றொன்று புகழோடு வாழ்வது. புகழால் நிலைபெறுகின்ற வாழ்வுதான் நல்ல வாழ்வு. புகழ் பேசப்படும் இடமெல்லாம், அவனும் இருக்கின்றான். அந்தக் காலம் வரைக்கும் அவனும் வாழ்கின்றான்.

இந்த உண்மை ஒளவையாரால் சொல்லப்படுகின்றது. அது அவருக்கும் பொருத்தம் உடையதாகும்.

“புனத்தை எரித்த குறவனின் செயலாலே குறைபட்டுப் போனதாய் கிடைக்கும் கட்டைகளைப் போன்ற கரிந்த புறத்தையுடைய விறகினாலே அமைக்கப் பெற்றது இந்த ஈமமாகிய ஒள்ளிய அழல்.

இந்த அழல் அந்த உடலை நெருங்கினாலும் நெருங்குக: அல்லது நெருங்காமற் சென்று நீங்கியிருக்கலாம் எனினும் நீங்கியிருக்க!

இவை அனைத்தும் எப்படியிருந்தாலும், இவற்றால் அவனுடல் எரிந்து சாம்பலாக ஆகிவிட்டாலும், அவன் வாழ்வான்! புகழ் உடம்போடு அவன் என்றும் நிலைத்திருப்பான். அவன் புகழ் மாயக் கூடியதும் அன்று."

இவ்வாறு, அதியனின் உடலை ஈமத்தீ பற்றி உண்ணக் கண்ட ஒளவையார், மிகவும் தெளிவுபட, நெஞ்சம் கலங்கிக் கூறுகின்றார்.