பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

143



எரிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்ளழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே!

அதியனின் புகழைப் பற்றிய ஒளவையாரின் இந்த உறுதி அவருடைய புகழுக்கும் பொருந்துவதாகும். இப்படிப் புகழோடும் வாழ்ந்த சிறப்பினராக, நாம் சங்ககால ஒளவையாரைக் காண்கின்றோம்.

சங்க இலக்கியங்களுள், ஒளவையார் பாடிய செய்யுட்கள் பலவும் மிகவும் நுட்பமான பொருளமைதியுடன் விளங்குகின்றன. அவையனைத்தையும் கற்று, நாம் இன்புறுதற்கு முற்படல் வேண்டும்.

113. மடந்தை நட்பு!

ட்பு என்பது சிரித்து விளையாடியும், உண்டு களித்து உறவாடியும் மகிழ்தற்கு மட்டுமே உரியதாகாது. இவை நட்பினரின் இயல்பாயினும், இவற்றினும் மேலாக, என்றும் இன்பத்தினும் துன்பத்தினும் ஒன்று கலந்தவராக உறவு பூண்டிருக்கும் நட்பினை உடையவரே சிறந்த நட்பினராவர்.

இப்படிப்பட்ட சிறந்த நட்பிற்கு எடுத்துக்காட்டாகத் தமிழ் ஆசிரியர்கள் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் கொண்டிருந்த நட்புச் செறிவைக் கூறுவார்கள்.

சோழன் வளவாழ்வினனாக ஆட்சிப் பீடத்திலே அமர்ந்திருந்தபோது, தம்முடைய நட்பினைக் கொண்டு, அவனை அடைந்து களித்திருக்கப் பிசிராந்தையார் கருதினார் அல்லர். அவனைக் காணாதேயே அவனுடைய உள்ளன்பைப் பிறர் சொல்லக் கேட்ட அளவாலேயே, அவனை நட்பாகக் கொண்டு விட்டவர் அவர்.

இப்படியே சோழனும், பிசிராந்தையாரின் தமிழ்ச் செவ்வியினைக் கேட்டும், உளப்பண்பினை அறிந்தும் அவர்பால் நட்புக் கொண்டான். இருவரது நட்பும் வளர்ந்தது. அதற்கு இருவரது நேரடியான சந்திப்புக்கூட வேண்டியிருக்கவில்லை.

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்து, அதனை மேற்கொண்டும் விட்டான். பொத்தியார் போன்ற புலவர்கள் பலர், அதனைக் கண்டு கலங்கினர். சிலர் அவனைப் பிரிந்து வாழ்வதற்கு மனமற்றவராகத் தாமும் அவனுடன் வடக்கிருக்கலாயினர்.