பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

11



இவையெல்லாம், இப்படிப் பழக்கத்தாலும் வாழும் சூழ்நிலையாலும் வந்தமைவனவாம்.இவற்றைப் பிறவிக்குணமாகக் கொள்ளுதல் பொருந்தாது. ஆனால், பிறவிக் குணமாக ஏதும் கிடையாதோ என்று கேட்டால், உண்டு; அவை நட்பு, தயை, கொடை முதலியன.

பிறரோடு நட்புடையவராகவும், பிறர்பால் இரக்கங் கொள்ளுகிறவராகவும், பிறருக்குக் கொடுத்து உதவுகிற மனமுள்ளவராகவும் ஒருவர் விளங்கினால், 'அவரை பிறவியிலே திருவுடையார்' என்று போற்றலாம்.

இந்தக் கருத்துகளை அழகிய வெண்பா வடிவில் அமைத்துப் பாடினார் ஒளவையார்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

"சித்திரம் எழுதும் ஆற்றல் கைப்பழக்கத்தால் அமைவது. செந்தமிழின் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் வருவது. சேமித்து வைத்த ஒப்பற்ற கல்விச் செல்வம் மனப் பழக்கத்தால் உருவாவது. நாள்தோறும் நடத்தையில் முறையாகப் பழகுவது நடையில் திறமையைத் தருவதாகிறது. ஆனால் நட்பும், இரக்க குணமும், கொடுக்கும் இயல்புமோ பிறவியிலேயே படிந்துவரும் நற்குணங்களாகும்” என்பது இதன் பொருள்.

இது, கம்பரின் புலமையினைப் பழக்கத்தால் படிந்தது எனக் கூறியும், பிறவிக் குணங்களான நட்பு, தயை, கொடை முதலியன அவர்பால் காணப்படாதவை எனச் சுட்டிப் பழித்ததாகவும் அமைந்தது.

இதனால், இந்த விவாதம் மேலும் சிறிது சூடுபிடித்துத் தொடரலாயிற்று.

7. பூனை கண்ட கிளி

சோழ மன்னனின் நிலைமையோ தர்மசங்கடமாயிற்று. ஒளவையாரின் பேச்சிலே உண்மை ஒலிப்பதை அவனும் அறிவான். எனினும், கம்பரை அவர் அடியோடு மட்டந்தட்டி வருவதனை அவனால் ஏற்கவும் முடியவில்லை; அதனால் அவரை எதிர்க்கவும் மனமில்லை.

"பொறுமையே வடிவானவர்' என நாடு போற்றும் பெரும் புலவரான ஒளவையார், இப்படிக் கம்பரை வம்புக்கு இழுப்ப-