பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

39


காத்தருளும் வருணனே! சிறந்த மலையமானின் திருக்கோவலூரில் பாரி மகளிரின் பெருமணம் நிகழப் போகிறது. முன்பெல்லாம் மழை பொழிந்து இவ்வூரை வளப் படுத்துவாய். பழைய நின் பெயலைச் சற்றே மாற்றிக் கொண்டு, பொன்னையே மழையாகப் பொழிவாயாக" என்பது பொருள்.

வள்ளல் பாரியின் மக்கள் அவர். அவர்க்குத் துனணயோ தமிழ்ப் பெருமாட்டியான ஒளவையார் வருணனும் உதவுதற்கு உடனே மனமிசைந்தான். பொன்மாரியும் பொழிந்தது. திருமணத்துக்கு வேண்டிய பொன்னுக்கும் கவலையில்லை.

பொன்னைக் கொடுத்து வேண்டிய பற்பல பொருள்களை எல்லாம் வாங்கிக் குவித்தனர். எங்கும் பாரி மகளிரின் திருமணப் பேச்சே எழுந்து முழங்கிற்று.

இப்பாடலின் பிற்பகுதி, 'திருமணத்து, நன்மாரி தாழ்க் கொண்ட நன்னீர் அது தவிர்த்துப் பொன்மாரியாகப் பொழி’ எனவும் வழங்கும்.

26. பாலும்! நெய்யும்!

பொன்னைப் பற்றிய கவலை நீங்கியது. பொன்னாலும் பெறமுடியாத சில பொருள்களும் இருந்தன. அவை பால், மோர், தயிர், நெய் ஆகியன. அவற்றை எப்படிப் பெறுவது?

நாடெல்லாம் தேடினாலும் வேண்டும் அளவுக்குக் கொணர முடிவதில்லையே! அதனால், ஒளவையார் அதற்கும் தெய்வத் துணையினையே நாடினார்.

பெருகிவரும் பெண்ணையை அழைத்தார். அதனைப் பாலும் நெய்யும் ஆகியவற்றைத் தந்தருள வேண்டினார்.

பெண்ணை நதியும் அப்படியே பாலாகவும் நெய்யாகவும் பெருகி வந்தது. ஒளவையாருக்கு அந்தக் கவலையும் நீங்கிற்று.

முத்தெறியும் பெண்ணை முதுநீர் அதுதவிர்ந்து
தத்திய நெய்பால் தலைப்பெய்து - குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவும் கொண்டோடி வா.

“முத்துக்களைக் கொணர்ந்து கரையிடங்களிலே எறிகின்ற பெண்ணையாறே பழைமையாக நீ கொண்டுவரும் நீரினை அல்லாமலும், நெய்யும் பாலும் குதித்தோடி வரப்பெருகி வருவாயாக.