பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஔவையார் தனிப்பாடல்கள்


குன்றினைப் போன்ற சூலானது வந்து அடைந்தாலும், அவர்களின் கூந்தலானது மாயவனுதும் பாஞ்சசன்னியம் என்னும் சங்கினைப் போன்று வெண்மை அடைந்தாலும் அவர்களைக் கைவிட்டுப் பிரியாதீர். குற்றமற்ற மணிக்குன்று போல வீறுபெற்றுக் குவிந்துள்ள கொங்கைகளை உடைய இவர்களுடன் நீர் இன்று இன்புற்று இருப்பது போலவே என்றும் இருப்பீராக” என்பது பொருள்.

இவ்வாறு அறிவுரை சில கூறிய பின்னர், தம் கடமையை நிறைவேற்றிய மனநிறைவுடன், ஒளவையார் பிரியாவிடை பெற்றுச் சென்றார். திருமணத்திற்கு வந்திருந்த மூவேந்தரும் பிறரும் தத்தம் நாடுகட்குத் திரும்புகின்றனர்.

இந்தப் பாக்கள் அனைத்தும் சங்ககாலச் செறிவுடன் தோன்றவில்லை. எனவே, இவற்றைப் பிற்பட்ட ஒளவையார் பாடியதாகவும் கொள்வார்கள். அந்தக் கொள்கைக்குத் தக்கபடி அவர்கள் 'பாரிமகளிர்' என்பதற்கு வேறு ஒரு விளக்கமும் தருவார்கள்.

‘மலையமானின் திருக்கோவலூர்க்கு அருகாமையில் 'பாரி' என்னும் ஓர் ஆட்டு இடையன் இருந்தான். அவனுக்கு அங்கவை சங்கவை என்னும் இரு பெண் மக்கள் இருந்தனர். அவர்களைக் குறித்து எழுத்தவையே இந்தப் பாடலின் நிகழ்ச்சிகள்' என்பார்கள் அவர்கள்.

இந்தப் புதிய கதையிலும் ஐயப்பாடுகள் இல்லாமல் இல்லை. இடையனின் மக்களைத் தெய்வீகன் ஆகியவர் மணந்துகொள்வதும், மூவேந்தர் வந்து கலந்து கொள்வதும் பொருத்தமாக இல்லை.

இதனால், நாம் பாட்டிற்கு ஏற்பவே நிகழ்ச்சிகளை உருவாக்கிக் கொள்வதுடன் அமைதியடைய வேண்டியவர்கள் ஆகின்றோம். காலக்கணக்கை ஆராய்ச்சிப் பற்றாளர்கள் கவனிக்கட்டும்.

31. மூவகை மனிதர்!

ருவருக்கு ஒருவர் நன்மை செய்ய வேண்டும். இதுவே மனிதப் பண்பு. பலர்பால் இது அமைவதில்லை. இப்படிப்பட்ட மனிதர்களையும் மூவகையினராகப் பிரித்து காட்டுகின்றார் ஒளவையார்.

ஒரு சாரார் உயர்ந்தவர்கள். அவர்களிடம் வறுமையுற்றோர், ‘எங்கட்கு இப்படி உதவுங்கள்’ என்று வாயைத் திறந்து சொல்லக்கூட வேண்டியதில்லை. அவர்களாகவே, வந்தவர்களின் முகத்தைப் பார்த்ததும், அவர்களின் துயரத்தைப் போக்கி,