பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஔவையார் தனிப்பாடல்கள்



37. நல்லான் முல்லான்!

னித வாழ்விலே சிறு பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என மூன்று முதன்மையான பகுதிகள் உள்ளன. ஒருவனே சிறு பருவத்துக்கு வாலிபப் பருவத்திலும், வாலிபப் பருவத்துக்கு முதுமைப் பருவத்திலும் வேறுபடுகின்றான். இந்த வேறுபாடுகள் இயல்பான உடலமைதி மாற்றத்தினாலும், அவன் வாழ்க்கை நிலைகளாலும் அமைகின்றன என்பார்கள்.

மற்றுஞ் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் பண்பு ஒருநாள் முழுவதுங்கூட ஒன்றுபோல் இருப்பதில்லை. காலையில் ஒரு நிலையாக இருப்பார்கள்; நண்பகலில் ஒரு நிலையாக விளங்குவார்கள்; மாலையில் மற்றொன்றாக அவர்கள் மாறி விடுவார்கள். இவ்வாறு மாறிக்கொண்டே போகின்ற மனித சுபாவம் உடையவர்களை நிலைகெட்டவர்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சமயம், ஒளவையார் 'முல்லான்’ என்றொருவன் வீட்டிற்குச் சென்றிருந்தார். முல்லான் அவரை மிகவும் அன்புடன் உபசரித்து வந்தான். அவனுடைய அன்பு அவரைக் கவர்ந்தது. அவருடைய தமிழ் அவனையும் ஆட்கொண்டது. பல நாட்கள் தன்னுடன் இருந்து செல்லுமாறு, அவன் ஒளவையாரை வற்புறுத்தினான். அவரும் அவனுடைய அன்புக்கு அடிமையானார்.

‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்' என்பார்கள். பல நாட்களாகியும் முல்லான் முதல்நாளிற் போலவே அன்புடன் அவரைப் பேணி வந்தான். நாளுக்கு நாள் முல்லானின் அன்பு உபசாரம் பெருகிற்றேயன்றிக் குறையவில்லை.

ஒளவையாரின் உள்ளம் குளிர்ந்தது. அவனது விருந்தோம்பும் நல்ல குணத்தை வியந்தார். அவருடைய உள்ளத்தில் எழுந்த களிப்பினாலே அரிய செய்யுள் ஒன்றும் எழுந்தது.

'மனிதர்கள் காலையில் ஒரு தன்மையாகவும், கடும் பகலில் மற்றொரு தன்மையாகவும், மாலையில் வேறொரு தன்மையாகவும் விளங்குவதனைத்தான் கண்டிருக்கின்றோம். அகமும் முகமும் மலர்ந்து, எந்நேரமும் ஒரே தன்மையுடன் உபசரிக்கிறான் முல்லான். இவனைப் போல இதுவரை யாம் கண்டறியோம்' என்ற பொருளுடன் அச் செய்யுள் அமைந்தது.

இது ஒரு வேடிக்கையான செய்யுளும் ஆகும். 'முல்லை’ என்று பெண்களுக்குப் பெயரிடுவது உண்டு. ஆனால், 'முல்லான்' என்று ஆண்களுடைய பெயரும் வழங்கும் என்று இச் செய்யுளால் அறிகின்றோம். இதனை நன்றாகக் கவனிக்க வேண்டும்.