பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

ஒளவையார் தனிப்பாடல்கள்


கூத்தர் பாடியது

வெள்ளத் தடங்காச் சினவாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழைத்
துளியோ டிறங்கும் சோணாடா!
கள்ளக் குறும்பர் குலமறுத்த
கண்டா வண்டர் கோபாலா
பிள்ளை மதிகண் டெம்பேதை
பெரிய மதியும் இழந்தாளே!

புகழேந்தி பாடியது

பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்தென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா!
கொங்கைக் கமரா பதியளித்த
கோவே ராஜ குலதிலகா!
வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும்
மெலிந்தம் பிறைக்கும் விழிவேலே!

41. நான்கு கோடி!

ரூரில் ஒரு போலி வள்ளல் இருந்தான். அவன் பெயருக்குத் தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது.

வள்ளலுக்குத் தமிழ்ப் புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள்.

ஒரு சமயம், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எளிதில் முடியாத ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுபவர்க்கு ஆயிரம் பொன் தருவதாக அறிவிக்கலாமென நினைத்தான்.

அதன்படி, நாலுகோடிக் கவி செய்தால் அவர்க்கு ஆயிரம் பொன் தருவதாக அறிவித்தான். நாலுகோடிக் கவிகளை எவரால் பாடுதற்கு முடியும் பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே! அவனும் தெரிந்துதான் இதனை அறிவித்தான்.