பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கிய வளர்ச்சி

23


யாய் நின்று, உயர்ந்த குறிக்கோளைக் காட்டும் நெறியில் நடப்பனவெல்லாம் இலக்கியமாகும் என்பது அவர்தம் கருத்து. அது ஒரு சொல்லாகவும் இருக்கலாம்; பல அடிகளாகவும் இருக்கலாம்; பாட்டாகவும் இருக்கலாம்; உரைநடையாகவும் இருக்கலாம். எப்படியிருப்பினும், படிப்பவன் உள்ளத்தைத் தொட்டு அவன் வாழ்க்கை உயர உதவும் எதுவும் இலக்கியமேயாகும் என்பது அவர் கருத்து. ஆயினும், பெரும்பாலும் இலக்கியம் என்றதும் பாட்டினைப் பற்றிய கருத்தையே மேற்கொண்டு ஆராய்கின்றனர். அவர் வழி நின்று பாட்டாகிய இலக்கியம் பற்றிச் சிறிது காண்போம்:

உலகில் காணும் பிற எல்லாச் செயல்களும் அழிய, இலக்கியமே என்றும் அழியாத ஒன்று என்பதை மேலை நாட்டுக் கவிஞராகிய ஸ்பென்ஸர் (Spenser) என்பவர் தம் ‘‘Ruins of Times’ என்பதில் காட்டும் முறை சாலச் சிறந்ததாகும்.

'For deeds to die however nobly done
And thoughts of men do as themselves decay
But wise words, taught in numbers for to run
Recorded by the muses, live for ay
Ne may with storming showers be washed away
Ne better-breathing winds with harmful blast
Nor age, nor envy, may then ever waste'

என்ற அடிகள் இலக்கியமே மற்றெல்லாவற்றினும் மேம்பட்டதென்ற உண்மையினைத் தெள்ளத் தெள்ளியக் காட்டுகின்றனவன்றோ? வில்லியம் ஜான் கோர்ட்ஹோப் (William John Courthope) என்பார் கவிதைக் கலையைப் பிற கலைகளோடு ஒப்பிட்டுப் பேசும்போது, அதன் ஏற்றத்தைச் சீர்தூக்கிப் பாராட்டுகின்றார். அவர்தம் எழுத்திலேயே அதைக் காணலாம்.