பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


நாட்டிலிருந்து கிறித்தவ சமயம் பரப்பவந்த பாதிரிகளுள் பலர் தமிழின்மேல் பற்றுக் கொண்டார்கள். டாக்டர் போப்பு என்பர் தம்மைத் தமிழராகவே மாற்றிக்கொண்டு ‘போப்பைய’ரானார். அவர் திருவாசகம், திருக்குறள் போன்ற தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் தமிழரின் பெருமையை உணர்ந்து கொள்ளுமாறு செய்தார். அத்துடன் இளம் பிள்ளைகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் ‘போப்பையர் தமிழ் இலக்கணம்’ என்ற இலக்கணத்தை எளிய தமிழ் நடையில் எழுதித் தந்தார். இன்னும் அவர் தமிழுக்குச் செய்த தொண்டுகள் பல. அவரைப் போன்றே இத்தாலி நாட்டிலிருந்து வந்த பெஸ்கி, தமிழ் நாட்டு முறைக்கேற்ப ‘வீரமா முனிவர்’ ஆனார். அவர் தமிழில் பாட்டிலும் உரை நடையிலும் பல இலக்கியங்களை ஆக்கித் தந்தார். தமிழ் மொழிக் குடும்பமாகிய திராவிட மொழிகளின் இயல்பையும் வளர்ச்சியையும் ஆராய்ந்து அதுவரை யாரும் செய்திராத ஒரு பெரும் புரட்சி எனும்படி திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற பெரு நூலை ஆங்கிலத்தில் எழுதித் தந்தவர் மேலை நாட்டுப் பாதிரியாராகிய கால்டுவெல் என்பவரேயாவார். இவ்வாறு மேலை நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார் செய்த தமிழ்த் தொண்டுடன், இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த கிறிஸ்தவத் தொண்டர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டனர். அவருள் சிலர் இயேசு பெருமான் சரித்திரத்தை உரை நடையிலும் செய்யுளிலும் எழுதி இலக்கியத்தை வளர்த்தனர். இது நிற்க.

இக்காலத்திலேதான் தமிழில் உரை நடை இலக்கியம் வளர்ச்சி பெற்றதென்னலாம். வீரமாமுனிவர் என்பவரும் அவருக்குப் பின் வந்தவருள் சிலரும், கல்லாதவரும் கற்று அறிந்துகொள்ளும் வகையில் எளிய உரைநடை நூல்களை எழுதினார்கள். அவற்றை ஒட்டித்தான் இன்று பலப்பல உரைநடை நூல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றுடன் மேலை நாட்டு ஆங்கில மொழியைத் தமிழ் நாட்டில் அதிகமாக பயிலத் தொடங்கியபின் அந்நாட்டு