பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


‘இராமன் அருமறைக் கவிந்த
பலவீ ழாலம் போல
ஒலியவிந் தன்றால் இவ்வழுங்கல் ஊரே,’

எனவும்,

ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொற் றலையின்
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல

எனவும் இராமாயணக் கதை சங்க இலக்கியங்களில் எடுத்தாளப் பெறுகின்றது.

‘ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்’

என்று பாரதக்கதை எடுத்தாளப்பெறுகின்றது. இவ்வாறு மேற்கோளாக வரும் கதைகளைத் தவிர வேறு பெருங்காப்பியங்களைச் சங்க காலத்து இறுதி வரை காண்டல் அரிது.

இவ்வாறு காப்பியமே இல்லாது வாழக் காரணமும், பின் காப்பியங்கள் பல்கிப் பெருகக் காரணமும் என்ன என்பதை ஆராயும்போது ஓர் உண்மை புலனாகும். மக்கள் அறிவு இன்றித் தவறிழைக்கும் காலத்திலேதான், அவர்கள் அறிவு கொள்ளுமாறு பிறர் வாழ்ந்து காட்டிய வரலாறுகளை மேற்கோள்களாகக் காட்டி, ‘அவர்கள் அறத்தாற்றின் வாழ்ந்தார்கள். அதனால், சிறந்தார்கள்; இவர்கள் மறம் பற்றி வாழ்ந்தார்கள்; எனவே கெட்டார்கள்,’ என்று அறிவுறுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பள்ளியில் படிக்கும் அறிவு திருந்தா இளம்பிள்ளைகளுக்குத் தானே பாட்டும் கதையும் அதிகமாகக் கற்றுக் கொடுக்கப் பெறுகின்றன? சங்க காலத் தமிழ் மக்கள் அனைத்தினுக்கும் மேம்பட்ட நிலையில், வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்து, மறம்