பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்



புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது

என்று வாழும் உடலைப்பற்றி மணிமேகலை கூறும் அடிகள் அனைவரையும் துறவு நிலைக்கு அழைக்கும் அடிகள் அல்லவோ! மேலும் ‘பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மக்கட்கு உண்டோ உறு பொருள்?’ என்று கேட்ட குரு மகனுக்குச் சாதுவன் கூறும் பதில்வழித் தம் சமய உண்மைகளை விளக்குகின்றார் ஆசிரியர். அனைத்தினுக்கும் மேலாக மக்கள் வாழ்வில் மனத்தாலும் வாக்காலும் செயலாலும் இழைக்கும் தீமைகளை,

‘கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
உள்ளம் தன்னில் உதிப்பன மூன்றும்எனப்
பத்தும் குற்றம்’

என்று பகுத்துக் கூறும்போது அவர் வள்ளுவர் குறளின் சாரத்தை வடித்துக்கொடுக்கும் திறன் விளங்குகின்றதன்றோ? மேலும் உலகில் மக்களாய்ப் பிறந்து வருந்துவோர் வாட்டம் தீர்த்து, ஈத்துவக்கும் இன்பத்தால் வரும் சிறப்பு அற்ற தெய்வ உலக வாழ்வையும் வேண்டா என்று ஆபுத்திரன் ஒதுக்கும் காட்சி உண்மையில் மனித உணர்வோடு வாழ வேண்டியவர் கொள்ள வேண்டிய செயலாக அன்றோ அமைகின்றது?

‘வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர்
திருந்துமுகம் காட்டும்என் தெய்வக் கடிஞை
உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ