பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கஞ்சியிலும் இன்பம்

பூசாரி வரம்


    "ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை, பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை" என்று தமிழ் நாட்டுப் பழமொழி சொல்கிறது. ஏற்றப் பாட்டு, பூசாரி பாட்டு என்னும் இரண்டும் புலவர்களாலும் பின்பற்றி இயற்ற முடியாத அமைப்பை உடையன. உணர்ச்சி ஒன்றையே ஆதாரமாக வைத்துத் தாளம் தவறாமல் பாடும் அந்த நாடோடிப் பாட்டிலே தொடர்ச்சியாக ஒரு பொருளைப் பார்ப்பது அருமையிலும் அருமை. ஆனாலும் பாமர மக்களின் உள்ளத்தை அந்தப் பாடல்கள் பிணிக்கின்றன.

ஏற்றப் பாட்டுக்கும் பூசாரி பாட்டுக்கும் சில வேறு பாடுகள் உண்டு. ஏற்றக்காரன் வாத்தியத்தின் துணை ஒன்றும் இல்லாமல் ஒரு தொழிலைச் செய்து கொண்டே பாடுகிறான். அவனுக்கு அந்தப் பாட்டு முழுவதும் மனப் பாடமாக இருக்கும். பூசாரியோ பாடும் பொழுது உடுக்கை அடித்து ஆவேசம் கொண்டு பாடுகிறான். அப்படிப் பாடுவதுதான் அவன் தொழில். பல காலமாக வழங்கிய பாடல்களை அவன் சொல்லதோடு இடையிடையே தன்னுடைய கைச்சரக்கையும் சேர்த்துக்கொள்வான்.