பக்கம்:கடற்கரையினிலே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கடற்கரையிலே


வாழும் நாட்டில், வானம் பொய்யாது, வளம் பிழைப்பறியாது என்று இளங்கோவடிகள் பாடினாரே! கற்புத் தெய்வமாகிய நீ கோயில் கொண்டிருக்கும் நாட்டிலே இக்கொடுமை நிகழலாமா? நெஞ்சறிய ஒரு பிழையும் நான் செய்தறியேனே ! வஞ்சமின்றி வாழும் என் குடிகள் பஞ்சத்தின் வாய்ப்பட்டு வருந்துதல் தகுமோ? அன்னையே! நானும் இந்நாடும் உன் அடைக்கலம்' என்று முறையிட்டேன். அன்றிரவு சற்றுக் கண்ணயர்ந்தேன்; ஒரு காட்சி கண்டேன். எண்ணிறந்த கப்பல்கள் தமிழ் நாட்டிலிருந்து நெல் மூடைகளைக் கொணர்ந்து இந்த யாழ்ப்பாணக் கரையிலே இறக்கிக்கொண்டிருக்கக் கண்டேன்; கண் விழித்தேன். கப்பலும் இல்லை; நெல்லும் இல்லை. கனவிற் கண்ட காட்சி என்று உணர்ந்தேன்; கவலையுற்றேன். ஆயினும், அக்கனவு வீணாகப் போகவில்லை. ஈழ நாட்டின் துயரம் தீர்ப்பது சோழ நாட்டின் உரிமையன்றோ என்று சிந்தித்தேன். சோழநாடு காவிரி பாயும் வளநாடு, குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் பலர் அந்நாட்டில் வாழ்கின்றனர். இல்லையென்று சொல்லாமல் எல்லையின்றிக் கொடுக்கும் நல்லார் பலர் அங்குள்ளார்கள். அவர்களுள் தலைசிறந்தவர் வாடாத பாமாலை பெற்ற வள்ளல்; சடையாது கொடுக்கும் சடைய வள்ளல். அவரிடம் இந்நாட்டின் சார்பாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு ஆறாம் நாளில் வந்தது ஆயிரம் கப்பல். அதோ! குன்று போலக் குவிந்திருக்கின்றதே அவர் அனுப்பிய நெல் அந்த நெல்லிலே ஒரு கல்லுண்டா? கலப்புண்டா? பதருண்டா? பச்சையுண்டா? அதை அள்ளிப் பார்ப்பவரெல்லாம் துள்ளி மகிழ்கின்றார்களே ! இன்றுதான் இந்நாட்டார் முகத்தில் புன்னகை தவழக் கண்டேன்; என் மனக்கவலை விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/52&oldid=1247630" இலிருந்து மீள்விக்கப்பட்டது