இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
கடற்கரையிலே
" வசை தீர்த்த வளநகரே ! தமிழ் நாட்டு வள்ளல் அனுப்பிய நெல், இத்தமிழ் நகரத்தில் வந்து சேர்ந்தது பொருத்தமுடையதன்றே? இந்நெல்லை அள்ளும் பொழுதும் அளக்கும்பொழுதும், உணவாக்கி உண்னும் பொழுதும் தமிழ் அன்னத்தால் உயிர் வாழ்கின்றோம் என்ற உணர்ச்சி ஒவ்வொருவருக்கும் உண்டாகும். அவ்வுணர்ச்சியால் எழுகின்ற நன்றி, ஈழ நாட்டுக்கு என்றும் நலமளிப்பதாகும்.
" இசைவாணர் கண்ட மணிநகரே ! உன்னால் இந்நாட்டுக்கு வந்த துன்பம் தீர்ந்தது, வயிறார உணவுண்ணும் உயிர்கள் எல்லாம் உன்னை வாயார வாழ்த்துக! உன் திசை நோக்கி வணங்குக!” என்று கை கூப்பித் தொழுது விடை பெற்றான், கவலை தீர்ந்த கண்டி மன்னன்.