இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
அருமை யாகச் செய்கின்றார்
ஐயா நீயும் விளம்பரத்தில்
பெருமை கொள்ளும் பெருமானே
பித்தோ மாந்தர் செயலெல்லாம்?
45
பாவம் செய்யா துன்னடியைப்
பற்றிக் கிடந்தால் அதுபோதும்.
தேவ தேவா உன் நிழலே
சேரும் சொர்க்கம் எனநினைத்தால்
கூவி யழைத்துக் காட்டுகின்ற
கோணல் சொர்க்கம் வேண்டாமே!
தேவ மாதர் இருந்தாலும்
தேவை யில்லையவர்சொர்க்கம்!
46
பகலைச் செய்யும் கதிருக்குப்
பாய்ச்சும் ஒளியைக் கொடுத்தாய்நீ
இகலிப் பொலியும் நிலவுக்கே
இன்பக் குளிர்ச்சி சேர்த்தாய்நீ
அகலும் நெருப்பில் வெப்பத்தை
ஆக்கி வைத்தாய் இளங்காற்றில்
சுகத்தைப் படைத்த பெருமானே
சுவைக்கும் வாழ்வை யருள்வாயே!
47
எப்பொருட்கும் முன்னுள்ளாய்
எல்லாம் உடைய பெருமானே
ஒப்பில் லாத பேரொளியே
உள்ளத் துள்ளே பொலிவானே
தப்பில் லாத வீணையிலே
தமிழை யிசைக்கும் மேலோனே
அப்பாற் கப்பா லானாலும்
அழைத்தால் வருநல் அருளோனே!
48