பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. உயிர் என்பதன் விளக்கம்


உயிர் என்பது என்ன? - என்பதைக் காண வேண்டி யது ஈண்டு மிகவும் இன்றியமையாதது.

சைவ சித்தாந்தக் கொள்கையினர் கூறும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களுள் கடவுள் என ஒன்று இல்லையே! அடுத்து உயிர் என்பது என்ன என்று திட்டவட்டமாக இன்னும் கூறமுடியவில்லை. உயிர் எனத் தனியே ஒன்று இருப்பதாகவே பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். பிணத்தால் சிறிதும் இயங்க முடியவில்லை; எனவே, பிணமாகிய உடலுக்குள் இருந்த ஏதோ ஒரு பொருள் உடலினின்றும் வெளியேறிவிட்டது; அதனால்தான் உடலால் இயங்க முடியவில்லை; வெளியேறிய பொருள்தான் உயிர் என்பது-எனப் பலரும் நம்பிக்கொண்டுள்ளனர். காட்சியளவையாக (பிரத்தியட்சப் பிரமாணமாக) உயிரைத் தனியே பிரித்துக் கண்ணால் காண முடியாவிடினும், இயங்கும் உடல், இயங்காத பிணம் என்னும் இரண்டையும் காட்சியளவையாகக் கொண்டு, அவ்வளவையின் உதவியால், இயங்கும் உடலில் உயிர் என ஒன்று இருக்கவேண்டும்-இயங்காத பிணத்தினின்றும் அவ்வுயிர் வெளியேறிவிட்டிருக்க வேண்டும்-எனவே, உயிர் என்னும் ஒரு பொருள் இருப்பது உறுதி எனக் கருத்தளவையாக (அனுமானமாக) முடிவு எடுத்துள்ளனர்.