பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20



நமையின்று உயர்த்தும் நாக ரீகம்
சமையல் அடுப்புகள் சாதித்த வெற்றியே.
குடும்பம் என்பது குட்டி அரசியல்!
படுக்கை அரசியல் சிறந்தால், நாட்டில்
நடக்கும் அரசியல் நலிவு பட்டாது!

ஒருவர் மேனியில் ஒருவர் ஒதுங்கியும்
இருவர் கைக்குள் இருவரும் அடங்கியும்
கொடுத்த இன்பத்தைக் கூசாது பெற்றும்
அன்புபரி மாறியும் துன்பத்தைப் பகிர்ந்தும்
வாழும் இல்லற வாழ்க்கை ஒன்றுதான்
பெண்ணும் ஆணும் பெறும்பே ரின்பம்!
காதலும் திருமணக் கலப்புமில் லாமல்,
ஏதிவ் வுலக வாழ்க்கையில் வெற்றி?
வேல்வாள் வெற்றி வேய்ந்த விதானத்தில்
அரசுவீற் றிருக்கும் அரியணை வாழ்க்கை
விரும்புமோர் பெண்ணின் கரும்பு நெஞ்சில்
இருந்தர சாளும் இன்பத்திற் கீடோ ?
பிச்சை எடுப்பினும் பிணியால் நலிந்தே
எச்சிற் சாக்கடை அருகில் இருப்பினும்
பண்புடைப் பாவை ஒருத்தியின் காதலை
வென்றவன் உண்மையில் வாழ்க்கையில் வென்றவன் !

மண்ணைப் படைத்த ஆண்டவன், ஆணைப்
பெண்ணைப் படைத்த பெருங்கதை அறிவீர்.
நெளியும் மண்புழு விற்கும், நானிங்கு
மொழியும் கதைக்கும் முதுகெலும் பில்லை.
எந்த மதமும், உலகில் துன்பம்
வந்தது பெண்ணால் என்றே கூறும்.
இந்தக் கதையும் அந்தக் கருத்தை
முன்னால் நிறுத்தி முரசடிக் கின்றது.