பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37




கதிரின்றி விண்ணுக்குப் பெருமை யில்லை.
கற்பனையின் சிறப்பின்றிக் கவிதை யில்லை
முதிராத புலமைக்கு வரவேற் பில்லை
முட்டாளின் ஆட்சியிலே வளர்ச்சியில்லை
அதிகாரம் இல்லாத ஆட்சி யாளன்
அரியணையில் வீற்றிருந்தும் பயனே இல்லை
மதிப்பென்ன பெற்றிருந்தும் பொதுமை எண்ணம்
மலராமல் சிறப்பதில்லை மக்களாட்சி.

ஊராரின் எண்ணத்தைச் சுமந்து வந்தோர்
உறுப்பினராய் ஒன்றாக அமர்ந்தி ருக்கும்
பாராளு மன்றத்தில் என்க ருத்தைப்
பறைசாற்றி நிறத்திமிரை இந்த நாட்டில்
வேரோடு களைவதற்குச் சட்டம் செய்வேன் :
விரைவாகச் செயற்படுவேன். ஒன்றாய்க்கூடி
ஆர்வந்து தடுத்தாலும் அஞ்ச மாட்டேன்.
அதுவரையில் கண்ணிரண்டும் துஞ்ச மாட்டேன்.