பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

 அவைகளுள் செய்யுள் வடிவில் அமைந்தவை , தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பக்ம், கித்தேரியம்மாளம்மானை. திருப்பாவணி, திருக்காவலுர்க் கலம்பகம் மூலமும் உரையும், தேம்பாமாலை, அடைக்கலமாலை என்பன. வேத விளக்கம், வாமன் சரித்திரம், வேதியர் ஒழுக்கம், ஞான விளக்கம், பரமார்த்த குரு கதை, திருச்சபைக் கணிதம் முதலியன உரைநடை நூல்கள்.

தொன்னுால் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம் என்பன இலக்கண நூல்கள். அகராதிகள்: சதுரகராதி, தமிழ்-இலத்தீன் அகராதி என்பன.

வீரமா முனிவர் நல்ல நாவன்மை படைத்தவர். அங்ஙனம் நாவன்மை படைத்துப் பற்பல சொற்பொழிவுகளை அவையஞ்சாது, மெய்விதிராது ஆற்றி வந்தமையால்தான் தைரியநாதர் என்னும் பெயரையும் பெற்றனர். நாவன்மை படைத்தது போலவே, பாவியற்றும் பாவன்மையும் படைத்தவர் என்பது அவர் யாத்துள்ள காவியத்தாலும், தோத்திரப் பாடல்களாலும் அறிகிறோம். அக்கவிகள் சொல்லழகு பொருளழகு நிரம்பப் பெற்றுள்ளன: படித்தற்கும் இன்பந் தருவனவாக உள்ளன. இவர் மேற்கு நாட்டினராக இருந்து, தமிழ் அறிவு பெற்றுத் தமிழ் மொழியில் பெருங்காவியமாகத் தேம்பாவணியை இயற்றியுள்ளார். இந்நூலின் காட்டு வளம், நகர் வளம் கூறும் பகுதிகள் சிந்தாமணி, இராமாயணம் முதலிய நூற்போக்கிற் கியைய அமைந்துள்ளன. அவற்றிற்கெல்லாம் ஈண்டு எடுத்துக்காட்டுக்கள் எடுத்துக் காட்டப்பெறின், இக்கட்டுரை பரந்து போகும்.ஆதலின், ஒரு பாவின் நயத்தினை மட்டும் ஈண்டு விளக்கிக்காட்டி, மேலே சொல்வோமாக.