பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113



ஊக்கஏர் பூட்டி நோன்பால் உடல்செறு உழுது நன்றி
வீக்கமேல் விரதச் செந்நெல் வித்திநல் ஒழுக்க நீரைப்
போக்கநீ டிறைத்துத் தன் ஐம் பொறியெனும் வேலி காக்கின்
ஆக்கமாய்ப் பெருவீட்டின்பம் அண்டமேல் விளைக்கும் தானே

என்பது தேம்பாவணியில் ஒரு செய்யுள்,

இப்பாடல் கீழ்வரும் அப்பர் பெருமானார் அமுத வாக்கைப் போன்றது என்பதை நாம் உணர்தல் வேண்டும். கீழ் வருவது அப்பரது அருள்வாக்கு,

மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும்
வித்தை வித்திப்
பொய்மையாம் களையை வாங்கிப் பொறையெனும்
நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும்
வேலி யிட்டுக்
செம்மையுள் நிற்ப ராகில் சிவகதி
விளையு மன்றே.

என்பது.

மேலே உழவுத் தொழிலின் நடைமுறைகளையும், அதன் பயனையும் வீரமா முனிவர் நன்கு உருவகப்படுத்தி யுள்ளதைச் சிந்திப்போமாக. இவர் மதபோதகராய் வெளிநாட்டில் பிறந்தவராய் இருந்தும், தமிழ்நாட்டில் தலை சிறந்த தொழிலாகிய உழவுத் தொழிலின் சிறப்பையும் எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளார் என்பதை நாம் அவரது செய்யுளிலிருந்து உணரலாம். உழவுத் தொழிலோடு மோட்ச இன்பத்தை இயைத்துப் பேசுகிறார் புலவர். ‘’மோட்சம் என்பது அடைதற்கரிது, அணுகுதற்கரிது, சிந்தித்தற்கரிது என்று நினைக்க வேண்டா ! ஒழுக வேண்டிய முறையில், நடக்கவேண்டிய முறையில் ஒழுகினால், அவ்வரிய வீட்டின்பத்தையும்

க-8