பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

என்பதையும் உணர்த்தவே, “அறவாழி அந்தணன்” என்றனர். இறைவன் அந்தணன் என்னும் பெயர்க்கு உரியவன் என்பதைத் திருவாசகத்தில் “கொந்தணவும் பொழில் சோலைக் கூங்குயிலே இதுகேள் நீ, அந்தணனாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி” என்று கூறியிருப்பதால் அறியலாம். “அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே” என்றார் திருஞானசம்பந்தர். ஆகவே, இதுகாறும் கூறியதினின்று வள்ளுவர் பெருமானார் கடவுளைப் பற்றிக் கூறிய சொற்களினின்றும் சொற்றோடர்களினின்றும் கடவுளின் இயல்புகள் இன்ன என்பனவற்றை அறிந்தனம். இனி, இக்கடவுளிடத்து உயிர்களாகிய நாம் எந்த முறையில் தொடர்பு கொள்ளுதல் வேண்டும் என்பதையும் அறிவோமாக.

சீவர்களாகிய நாம் இவ்வுலகில் பிறந்து பிறந்து இறந்து இறந்து போவதில் பயன் இல்லை. பிறப்பும் இறப்பும் இடையறாது வருதலின் பிறப்பைப் பெரியகடல் என்று கூறி வருகின்றனர் ஆன்றோர். அப்பிறப்பாகிய கடலைக் கடத்தல் வேண்டும்; கடந்து பேர் இன்பமாகிய கரையினைச் சேரவேண்டும். இதுவே, சீவான்மாவின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அதனால்தான் நம்முன்னோர்கள் கடவுளை நோக்கி முறையிடும் போதெல்லாம் “வன்பிறவி வேதனைக்கு அஞ்சி உனை அடைந்தேன் ஐயா” என்றும், “பிறவாதிருக்க வரந்தரவேண்டும்” என்றும் வேண்டுவாராயினர், “இவ்வேண்டுகோள் நிறைவேற வேண்டுமானால் இறைவனது திருவடியாகிய தெப்பத்தைப் பற்றுங்கள். அத்தெப்பம் பிறவிக் கடலைக் கடக்கச் செய்து முத்திக்கரையினில் சேர்க்க வல்லது” என்று மக்களுக்கு அறிவுறுத்தவே, பொய்யில் புலவர் “பிறவிப் பெருங்கடல்