பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகத் தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில்
தோகைக்கும் தோன் றற்கும் ஒன்றாய் வரும் இன்பத்

                                                          துன்பங்களே”

என்று எடுத்து மொழிந்தனர்.

இப்பாடலிலிருந்து ஆசிரியர் பொருள்களைக் கூர்ந்து கவனிக்கும் இயல்புடையவர் என்பதும் புலனாகிறது. காக்கையை நாமும் பார்க்கின்றோம். அதற்கு இரு கண்கள் இருப்பதையும் உணர்கிறோம். ஆனால், அவ்விரு கண்களும் ஒரே சமயத்தில் ஒரு பொருளைப் பார்க்கும் வலியற்றவை. அஃது ஒரு பொருளைப் பார்க்கின், தலையைச் சாய்த்தே காண்பதை ஆசிரியர் உணர்ந்தார். அவ்வுவமையைத் தக்க இடத்தில் அமைக்கத்தலைவன் தலைவியர்களை இடமாகக்கொண்டனர். தலைவன் தலைவியர்க்கு உடல் இரண்டே ஆயினும், உயிர் ஒன்றேயாகும் என்ற சீரிய கருத்துடன் இன்ப துன்ப நுகர்ச்சியும் ஒரு படித்தாகும் என்ற அரும்பெரும் கருத்தையும் காட்டக் காக்கையின் இரு கண்களை உவமை கூறி விளக்கிய நுட்பத்தை என்னென்று வியப்பது !

திருக்கோவையாரில் சீரிய கருத்துக்கள் பலப்பல காணப்படுகின்றன. தலைவன் தலைவியைத் தன்னூருக்கு அழைத்துக்கொண்டு செல்கிறான். அதனை ஆற்றாத நற்றாய் தன் மகளைத் தேடிவரப் புறத்தே பறப்பட்டாள். வழியில் யோகதண்டம் தாங்கிய முக்கோல்பகவரை நோக்கித் தன் மகள் செய்தியைக் கூறினள். அவர் அவ்வம்மைக்கு நல்லறிவு கொளுத்த ‘அம்மையீர் சந்தனம், முத்து, சங்கு ஆகிய இவை பிறர்க்குப் பயன்படாவகையில் தாம் தாம் பிறந்த இடத்திலேயே இருப்பின் யாது பயன்? விரும்பினவர்கள்பால் சென்றால் அன்றோ அவை பெருமை அடையும்? அதுபோலவே உம் திருமகளை நீரே நும் வீட்டில் வளர்த்து வைப்பின் பயன் உண்டோ! ஆதலின்,