பக்கம்:கட்டுரை வளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. பாரதியார் பா நலம்

இந்நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழன்னையின் தவப் புதல்வராய்த் தோன்றியவர் பாரதியார். அவர் பிறந்த காலம் இந்நாடு தாழ்வுற்று விடுதலை தவறிக் கெட்ட காலம்; பாரத அன்னை அடிமைத்தளையில் கட்டுண்டு பரிபவம் அடைத்த காலம்; தமிழ் நாட்டிலும் பழைய பாட்டியல் மரபே கொண்டு பாடல்கள் இயற்றப் பட்ட காலம்; புதுமை அரங்கேறாதகாலம். இந்த இரண்டு நிலைகளும் மாற, இயன்ற அளவு நாட்டுப்பற்று மிக்க வராயும், மொழிப்பற்று மிக்க கவிஞராயும் தோன்றியவர் பாரதியார். நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல், இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்’ என்று பாரதியாரே தோத்திரப்பாடல்களில் முழங்கியுள்ளார். கவிதையிற் புதுநெறி காட்டிய புலவர் அவர்: கவிஞன் என்றால் அவன் எங்கோ கற்பனை உலகில் உலவிக் கொண்டு, மக்களினத் தொடர்பற்று வாழ்பவன் என்று பொதுவாகப் பலர் எண்ணிவந்த எண்ணத்தை மாற்றி, நாட்டின் விடுதலைப் போரிலும் நேரடிப்பங்கு கொண்ட வர் பாரதியார். இம்முறையில் நாடு, மொழி, இனம் ஆகிய முத்துறைகளிலும் பேரளவு தொண்டாற்றியவர் கவியரசர் பாரதியார்.

முதற்கண் பாரதியாரின் நாட்டுப் பற்றினைக் காண் போம். தாம் பிறந்த பொன் நாட்டினைப் பாரதியார் மகிழ்ச்சியோடு பாடிப் போற்றுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/136&oldid=1509123" இலிருந்து மீள்விக்கப்பட்டது