பக்கம்:கட்டுரை வளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 கட்டுரை வளம்

கற்பியலில் கற்பு நெறி இன்னது என்பதனைப் பின் வருமாறு கூறியுள்ளார் :

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”

-தொல். கற்பியல் 7

இந் நூற்பாவழி உற்றார் உறவினர் அறியத் தலைமகனும் தலைமகளும் இல்லறத்தில் தலைப்படும் நெறியினை நாம் அறிகிறோம்.

பொருளியல் மேற்சொல்லப்பட்ட இயல்களிலும் இனிச் சொல்லப்பெறும் இயல்களிலும் வரும் பொருளினது தன்மை உணர்த்தப்படுகிறது. அகப் பொருளில் வரும் நற்றாய், செவிலி, தோழி, தலைமகன், தலைமகள் முதலா னோர் தம் பண்புகளும் செயல்களும் இப்பொருளியலில் நன்கு கிளத்தப்படுகின்றன.

மெய்ப்பாட்டியலில் எண்வகைச் சுவைகள் கூறப்படுகின்றன.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

-தொல்.மெய்ப்பாட்டியல் : 3

நகை, அவலம், இழிபு, வியப்பு, அச்சம், வீரம், சினம், மகிழ்ச்சி என்னும் எட்டுச் சுவைகளும் மெய்ப்பாடுகளின் நிலைக்களனாய் உள்ளன. தொல்காப்பியனார் மெய்ப் பாடுகள் வாயிலாக மக்களது உள்ளத்தில் கிளர்ந்தெழும் எண்ண அலைகளை நுனித்தறிந்து ஆய்ந்து வரையறை செய்து கூறியுள்ளார்.

உவமவியலில் உவமை பற்றிப் பேசப்பட்டுள்ளது. தொல்காப்பியனார் உவமை அணி ஒன்றையே கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/24&oldid=1371257" இலிருந்து மீள்விக்கப்பட்டது