பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்த்துரை

இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பயன்பாட்டுக்கும் ஓர் இணையற்ற எடுத்துக்காட்டாக விளங்குவது கணினி. நாளும் மாற்றங்கள் காணும் தகவல் தொடர்பு நுட்பங்களும் கணினி நுட்பங்களும் இணைந்து செயல்படும் தகவல் பெருவழிப்பாதைகள் தோன்றிவரும் வேளை இது. உலகளாவிய இணையம், வரும் நூற்றாண்டின் தகவல் தொடர்பு, வணிகம், கல்வி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது. வளர்ந்து வரும் இந்தத் தொழில் நுட்பம் மாணவர்கள் முதல் மக்கள் அனைவரையும் தமிழ்மொழியில் சென்றடைய வேண்டும். அத்தகைய குறிக்கோளோடு தமிழறிஞரும், அறிவியல் ஆர்வலருமான உயர்திரு மணவை முஸ்தபா அவர்கள் ஆக்கியுள்ள கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி ஓர் அரும் படைப்பு ஆகும்.

வேகமான வளர்ச்சிகாணும் இத்துறைசார்ந்த ஆயிரக்கணக் கான ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களைக் கொடுப்பதுமட்டுமல்லாமல், சிறு குறிப்புகளும், விளக்கங்களும், வேண்டும் இடங்களில் படங்களுடன் இந்நூலாசிரியர் கொடுத்துள்ளார். இது இவரது ஏழாண்டுகால இடைவிடாத முயற்சிகளின் பயனாக வெளிவருகின்றது. வளர்ந்து வரும் எந்தத் தொழில்நுட்பத்தை யும் தெளிவாக எடுத்துச்சொல்லும் திறன் தமிழுக்கு உண்டு என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளதோடன்றி அதைச் செம்மையாகச் செயல்படுத்தியும் காட்டியுள்ளார் திரு மணவை முஸ்தபா அவர்கள். அவர் யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகப் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். ஏற்கனவே பல்வேறு அறிவியல் தொழில் நுட்பத் துறைகளுக்கான கலைச் சொற்களையும் அகராதி விளக்க நூல்களையும் படைத்த அவரது அனுபவம் இக்கணினி சார்ந்த நூலைப் படைக்க நன்கு பயன்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழை முறையாகப் பயின்று ஆர்வத்தோடு அறிவியல் சார்ந்த நூல்களைப் படைப்பவர் இந்நூலாசிரியர். நான்காம் தமிழாம்

23