பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவியல் தமிழைக் கணினி பற்றிய கலைச்சொல் அகராதிக் கலைக்களஞ்சியம் வழி வளம் பெறச் செய்கின்றார்.

இருபத்தோராம் நூற்றாண்டிலே இந்திய நாடு தகவல் தொழில் நுட்பத்துறையில் சிறப்பான இடம் பெற்றிட, பெரும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அம்முயற்சிகளிலே தமிழகம் ஒரு முன்னோடியாக விளங்குகின்றது. பட்டிதொட்டியெல்லாம் இன்டர்நெட்டை எடுத்துச் செல்லவும், பள்ளிகள், கல்லூரிகளில் பயில்வோர் கணினிப் பயிற்சி பெறவும், பல்லாயிரக்கணக்கான வல்லுநர்கள் இத்துறைக்கான படைப்புகளை உருவாக்கி உலகத்து நாடுகளுக்கெல்லாம் பணிக்களமாக விளங்கவும் தமிழ்நாடு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. இந்த நூல் அம்முயற்சிகள் வெற்றிபெற உறுதுணையாக விளங்கும் என்பது திண்ணம். இந்நூல் எல்லா நூல்நிலையங்களிலும் இருக்க வேண்டும். இளைய தலைமுறையினர் இதனைப் பயன்படுத்தி அவர்களுடைய புதுமையான படைப்புகளை நல்ல தமிழிலே தரவேண்டும். நூலாசிரியர் பல இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் கலைச்சொற்களை ஆங்கிலச் சொல்லுக்குக் கொடுத்துள்ளார். அவர் விரும்புவதெல்லாம் அவற்றில் சிறப்பான ஒன்று காலப்போக்கில் தக்க கலைச்சொல்லாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட ஆவன செய்யுங்கள் என்பதுதான். நாளும் வளர்ந்து வரும் இத்துறையில் புதிய புதிய கலைச் சொற்களைப் படைக்க வேண்டிய தேவையும் இருப்பதால் இப்பணி என்றும் தொடரவேண்டும். அதில் பலரும் பங்கேற்க வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

திரு மணவை முஸ்தபா அவர்களின் தமிழ்ப்பணி போற்றுதற்குரியது. அவர் படைத்துள்ள இந்நூல் உலகளாவிய தமிழ் இணையத்தில் இடம்பெற வேண்டும். தமிழ் மொழி கணினித்துறையோடு இணைந்து தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் முன்னிடம் பெறவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

இரா.மா.வாசகம் தலைவர் தமிழ்நாடுதகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம் (TANITEC)

24