பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Jargon - குழூஉச் சொல்

Slug - பருங்குழை

Finesse - நயநுட்பம்

Host - ஓம்புநர், புரவலர்

Malfunction - பிறழ்வினை

திரு மணவையாரின் இந்த நயநுட்பத்தை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. Disk என்பதற்கு வட்டு, மின்காந்தத் தட்டு என்று பொருள் கூறப்பட்டுள்ள போதிலும் பின்வரும் இடங்களில் எல்லாம் வட்டு என்ற சொல்லையே எடுத்தாள்கிறார். தட்டு' என்பது ஓரங்களைத் தட்டிச் செய்வது. Plate என்பதையும் தட்டு என்றே சொல்கிறோம். தட்டு வட்ட மாகவும் இருக்கலாம், வேறு வடிவங்களிலும் இருக்கலாம். வட்டமாக இருப்பது 'வட்டு வட்டெறிதல், வட்டாடல் என்று சங்க இலக்கியத்தில் படிக்கிறோம். வட்டமான தட்டுக்கு 'வட்டில்' என்ற சொல் வழக்காற்றில் உள்ளது. வட்டில் சுமந்து மருங்கசைய' என்ற பாட்டிலும் வக்கணையாய்ச் சோறாக்கி வட்டிலிலே போடலையே" என்று நாட்டுப்புறப்பாட்டிலும் கேட்டிருக்கிறோம். ஆக, Disk என்ற சொல்லுக்கு 'வட்டு' என்ற பொருத்தமான சொல்லையே திரு மணவையார் பயன்படுத்தியுள்ளார்.

Flexible என்பதன் பேச்சுவழக்குச் சொல் Floppy என்பதாகும். எனவே Floppy Disk 'நெகிழ்வட்டு' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மெல்லியதாக இருப்பதாலும் Hard Disk என்பதற்கு மாறாக இருப்பதாலும் மென்வட்டு ' என்றும் குறிக்கலாம். செருகி எடுத்துப் பயன்படுத்துவதால் 'செருகு வட்டு' என்ற மூன்று சொற்களையுமே தந்து நம்மைத் திக்குமுக்காட வைக்கிறார் திரு மணவையார் அவர்கள். Hard Disk என்பது பிரிக்க முடியாதவாறு தனிப் பொதியுறையில் நிரந்தரமாய்ப் பிணைக்கப்பட்டுள்ளதால் அதனை நிலைவட்டு' என மொழியாக்கம் செய்துள்ளதும் முற்றிலும் பொருத்தமே.

இவ்வாறு, திரு மணவையாரின் மொழியாக்கச் சிறப்புக் கூறுகளைப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே' என்று பழம்பெருமை மட்டுமே பேசிக் காலம் கழிக்காமல் நல்ல தமிழை - நல்ல அறிவியல் தமிழை - புத்தம் புதுத் தமிழைப்பற்றி எந்த நேரமும் சிந்தித்துச் செயலாற்றிவரும் திரு மணவையாரைப் போல் இன்னொரு தமிழறிஞரைச் காண முடியுமா என்பதே சந்தேகத்துக்குரிய கேள்வி. அரசும், பல்கலைக் கழகங்களும், வல்லுநர் குழுவும் செய்யவேண்டிய ஒரு பணியைத் தனியொருவராய் நின்று சாதித்துள்ள திரு மணவையார்

39