பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கிய 'கிரஸென்ட் இன்ஜினியரிங் கல்லூரி' அமைந்து, ஆற்றலாளர்களை உருவாக்கி உலகுக்கு வழங்கிக் கொண்டுள்ளது.

அறிவு வளர்ச்சியின் அடித்தளம் பெண்களே என்பதை நன்கு உணர்ந்து தெளிந்த பவழ விழா செல்வர், கீழக்கரையில் 'தாஸிம் பீவி அப்துல்காதர்' மகளிர் கல்லூரியைத் தோற்றுவித்து, பெண் உயர் கல்விக்கு வழி வகுத்துள்ளார். அன்னார் உருவாக்கிய நான்கு மேல்நிலைப் பள்ளிகளில் மூன்று மகளிர்க்கானவை என்பதிலிருந்து இவர் பெண் கல்வியில் கொண்டுள்ள பேரார்வம் எத்தகைய தென்பது புலனாகும்.

ஆதரவற்ற ஏழை எளிய இளஞ்சிறார்களைத் தாயுள்ளத்தோடு அரவனைத்துப் பேணிப் பாதுக்காத்து, அவர்களை வாழ்வின் உயர்நிலைக்குத் தயார் செய்ய 'அல்அமீன்' என்ற பெயரில் நான்கு சிறுவர் இல்லங்களையும் இரண்டு சிறுமியர் இல்லங்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.

சமுதாயக் கல்வியோடு மார்க்கக் கல்வி வளர்ச்சியிலும் பேரார்வம் காட்டி வரும் இப்பெருந்தகை 'புகாரி ஆலிம் அரபுக் கல்லூரி'யை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். சொல்லப் போனால், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இவர் உதவி பெறாத அரபுக் கல்லூரிகளோ, மதராசாக்களோ இல்லையென்றே கூறலாம்.

மனநலம் நாடும் கல்வித்துறை போன்றே மக்கள் உடல் நலம் பேணும் மருத்துவத் துறையிலும் பேரார்வமிக்கவர் இப்பெருந்தகை. இதற்கு கட்டியங்கூறுவன கிழக்கரை 'யூசுப் சுலைஹா மருத்துவமனை'யும் மதுரை 'கிரஸென்ட் மருத்துவமனை'யும் அதோடு இணைந்த 'செவிலியர் பயிற்சிக் கல்லூரி'யும்.

அன்று தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்கட்கு நிழல் தரும் குளிர் தருவாக விளங்கிய வள்ளல் சீதக்காதி போன்றே இன்று தமிழார்வலர்கட்கும் தமிழ்ப் படைப்பாளர்கட்கும் இளைப்பாறக் கிடைத்த இனிய தருவாக விளங்குகிறார். 'இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம்' அமைத்து இஸ்லாமிய இலக்கியப் பண்பாட்டுக்கு வழிகோலியுள்ளார். தமிழ்ப் படைப்பையும்