பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களும் மற்றும் அறிவியலார் பெயரில் அமைந்த ஆம்பியர், ஓம் போன்ற சொற்களும் பன்னாட்டுக் கலைச்சொற்களாகும்.

ஆங்கில மொழியும் அறிவியலும் நன்கு அறிந்தோரே இவற்றின் பொருள்நுட்பம் அறிவர். மற்றவர்கட்கு இச்சொற்கள் வெறும் குழுஉக்குறிகள் போன்றே தோன்றும்.

இஃதன்னியில் 'டெலிவிஷன்', 'டெலஸ்கோப்' போன்ற சொற்களும் உலகளாவிய முறையில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் அறிவோ அல்லது படிப்பறிவோ இல்லாதவர்கள் இச்சொற்களைக் குழுஉக்குறிச் சொற்களாகவே பயன்படுத்துகின்றனர். இந்த ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொற்களாக 'தொலைக்காட்சி', 'தொலை நோக்கி' எனத் தரும்போது தொலைவிலிருக்கும் காட்சிகளை அண்மையில் கொண்டு வந்து காட்டும் கருவியே 'தொலைக்காட்சி' என்றும் தொலைவிலிருப்பவர்களை நெருங்கிக் காண உதவும் கருவியே 'தொலைநோக்கி' என்றும் யாரும் விளக்காமலே தமிழ்க் கலைச்சொல் மூலம் பொருள் உணர்ந்து தெளிய முடிகிறது. இவ்வாறு ஆங்கிலம் அறியாத சாதாரண பாமர மக்களும் கேட்ட மாத்திரத்தில் தெளிவாகப் பொருள்புரியும் இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதால் ஏற்படும் இழப்பு எதுவுமில்லை. பயனோ ஏராளம், ஏராளம்!

எனவே, எழுத்தறிவின் உச்சத்தைப் பெறாத நம் மக்களிடையே அறிவியல் அறிவையும் உணர்வையும் அதிகரிக்க தாய்மொழியாம் தமிழ் மூலம் சொல்வதே சாலச்சிறந்ததாகும்.

அறிவியல் நுட்பங்களைத் திறம்பட விளக்கவல்ல மொழியாகத் தமிழ் அமைந்திருக்கிறதா என ஐயுருவோரும் இருக்கவே செய்கின்றனர். மொழியியல் பேரறிஞர் டாக்டர் கிரியர்சன் 'உள்ளத்தில் உருவெடுக்கும் சிந்தனைகளை - மிக நுட்பமான உணர்வுகளை, எண்ணிய எண்ணியாங்கு, திறம்பட வெளிப்படுத்தவல்ல மொழியாகத் தமிழ் அமைந்திருக்கிறது' எனப் புகழ்ந்துரைத்ததற்கொப்ப எத்தகைய அறிவியல்நுட்பச் செய்தியாயினும் அவற்றைச் சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் தமிழில் கலைச்சொல் வடிவில் சொல்ல முடிகிறது என்பதுதான் என் நாற்பதாண்டு காலக் கலைச் சொல்லாக்கப் பட்டறிவு உணர்த்தும் உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் இயல்பிலேயே அறிவியல் மொழியாக, அறிவியலைத் திறம்பட உணர்த்துவதற்கான ஆற்றல்மிகு மொழியாக அமைந்திருப்பதுதான். இது நாமே அறிந்துணரா உண்மைநிலை.

தமிழ்மொழி வரலாற்றை, வரலாற்று வழி நுணுகி ஆராய்ந்தால், காலந் தொறும் தமிழ் பல்வேறு துறைக் கலைச்சொற்களை உருவாக்கி, வளர்ந்து வந்துள்ள வரலாறு தெள்ளத்தெளிவாகப் புலப்படும்.

'காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப ஒருமொழி தன்னைத் தகை வமைத்துக் கொள்வதன்மூலமே வளர்ச்சியும் வளமும் பெறமுடியும்' என்பது மொழியியல் வரலாறு. அவ்வகையில் சமயத்தாக்கம் ஏதுமில்லாத சங்க காலத்தில் அறிவியல் அடிப்படையில் சமுதாயப்பூர்வமாக அகம், புறம் என வளர்ந்த

6