பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ், வைதீக சமய, சமண, பெளத்த, கிருத்துவ, இஸ்லாமியத் தமிழாக, தத்துவம் சார்ந்த சித்தாந்தத் தமிழாக வளர வேண்டிய தவிர்க்கவியலா சூழல். ஆங்கிலேயர் உறவால் அறிவியல் அடிப்படையிலும் புதினம், சிறுகதை என்ற புத்திலக்கியப் போக்கிலும் வளர வேண்டிய சூழ்நிலை. இக்கால கட்டங்களிலெல்லாம் புதிய கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த புதிய புதிய சொற்களை உருவாக்கிக் கொண்டு வளர, வளமடையத் தவறவில்லை. ஆனால், தயக்கமெல்லாம் தமிழர்களிடம்தான். தொய்வு மனப்பான்மை படைத்த சிலர் தங்களால் இயலாது என்பதை வெளிப்படுத்த விரும்பாது, அஃது தமிழாலேயே இயலாது என விளம்ப முற்பட்டு விடுகின்றனர்.

மருத்துவத் துறைக்கான ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொல் காணும் முயற்சி நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்பே தொடங்கி விட்டதெனலாம். அம்முயற்சிக்கு வடிவம் தந்தவர் ஈழத்தில் மருத்துவம் பயிற்றுவிக்க வந்த, யாழ்ப்பான மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஃபிஷ்கிரீன் என்ற அமெரிக்கர். அவர் தமிழில் உருவாக்கிய கலைச்சொற்கள் தமிழ்ப் பெயர் தாங்கியிருந்தபோதிலும் பெரும்பான்மையான கலைச்சொற்கள் சமஸ்கிருத ஒலி வடிவினவாகும். இதற்குக் காரணம் இக்கால கட்டத்தில் அங்கு உச்சத்தில் இருந்த இந்து சமயத் தாக்கமும் அதன் புனித மொழி என்ற போர்வையில் தமிழ் மீது செலுத்தி வந்த ஆதிக்கப் போக்குமாகும். இந்நிலையே இங்கும் நிலவிய போதிலும் திராவிட இயக்க எழுச்சிக்குப் பிறகு தமிழிலேயே கலைச் சொல்லாக்க முயற்சிகள் வலுப்பெறலாயின.

அன்றைய சமஸ்கிருதச் செல்வாக்கு தமிழ்க் கலைச்சொல்லாக்கத்துக்கு ஏதோ ஒருவகையில் முட்டுக்கட்டையாக அமைந்தது போன்றே இன்று 'தூய தமிழ்' ஆர்வலர்களின் தனித்தமிழ்ப் போக்கும் அமைந்துவிடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தாமலிருக்க முடியவில்லை. இலக்கியத்தில் மொழி முதன்மை நிலை பெறலாம். அறிவியல் கலைச்சொற்களைப் பொறுத்தவரை மொழியைக்காட்டிலும் கருத்துணர்த்தும் திறனுக்கே முதலிடம். சொல்வழி கருத்தை வெளிப்படுத்த உதவும் துணைக்கருவி மட்டுமே மொழி என்பதை நாம் உணர்ந்து தெளியவேண்டும். அறிவியலில் மொழிக்கு முதன்மைதர முற்பட்டால் கருத்துச் சிதைவும் பொருட்பிறழ்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் மற்ற மொழிகளில் காணமுடியாத ஒரு தனித்தன்மை தமிழ்க் கலைச்சொற்களுக்கு உண்டு. அதுதான் வேர்ச்சொல் தேடல்.

ஆங்கில மொழியில் ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டு மெனில், அதற்கான வேர்ச்சொல்லை லத்தீன், கிரீக், ஹீப்ரு அல்லது வேறு மொழிகளில் தேடிப் பெறவேண்டும். ஆங்கில மொழியில் வேர்ச்சொல் கிடைப்பது மிக அரிது. ஏனெனில், ஆங்கில மொழி, மேற்கூரிய மொழிகளின் கூட்டுக் கலவையாகும்.

ஆனால், அதே சமயத்தில் இந்தியிலோ அல்லது மராத்தியிலோ ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான வேர்ச்

7