உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகி தேவி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கண்ணகி தேவி


(Romans) காவல் புரியும் கோட்டை வாயிலைக் கடந்து, உள் நகரில் சென்று, பல்வேறிடங்களின் காட்சிகளைக் கண் கொள்ளாவகை கண்டுமகிழ்ந்தான். அம்மகிழ்ச்சி மிகுதியால், தாங்கள் அமருதற்கேற்ற இடந்தேடச் சென்றவன், அக்காரியத்தை மறந்து மீண்டு வந்து, புறஞ்சேரியிலுள்ள தபோதனர் இருக்கை புகுந்து, கவுந்தியடிகளிடம் மதுரையின் அழகினையும் பாண்டியன் கொற்றத்தையும் புகழ்ந்து கூறிக்கொண்டிருந்தான்.

இச்சமயத்தில், காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தென்மேற்குத்திசையில் சிறிது துரத்திலுள்ள தலைச்செங்காடு என்னும் ஊரில் வாழ்பவனாகிய மாடலன் என்னும் மறையோன், பொதியமலையை வலங் கொண்டு குமரித்துறைத்தீர்த்தம் ஆடி மீண்டு வருகின்றவன், வழி வருத்தம் ஆறுவதற்குக் கவுந்தியடிகள் இருக்கும் முனிவர் பள்ளியில் வந்து சேர்ந்தான். அம்மறையவன், கோவலனது பழைய நண்பனாதலால், கோவலன் அவனை வணங்கினான். உடனே மாடலன், கோவலனையும் கண்ணகியையும் கண்டு திடுக்கிட்டு, “கோவல, மெல்லியலான இத்திருமகளுடன் நீ இங்கு வந்ததற்குக் காரணம் என்ன? உன் போல்வார்க்கும் இத்தகைய துன்பம் எய்துவதோ? முன்பு, உன்னால் காதலிக்கப்பட்ட மாதவி வயிற்றிற் பிறந்த மகளுக்கு, நீ மணிமேகலையெனப் பெயரிட்டு மங்கலங் கொண்டாடிய நாளில், நீ அள்ளி அள்ளிக் கொடுக்கும் சுவர்ண தானம் பெறுமாறு ஒரு மறையவன் மூப்பினால் முதுகு வளைந்து தளர்ச்சியினால் தண்டூன்றித் தள்ளாடி வருகையில், பாகனை மீறி ஒடி வந்த மதயானை, அக்கிழ மறையோனைக் கையால் வளைத்து எடுத்ததாக, அப்போது நீ யானையை அதட்டி அதன் கையிலகப்பட்ட மறையவனை விடுவித்துத்தக் தந்தத்தைப்பற்றி ஏறி, பிடரில் அமர்ந்து அம்மதயானையை வலி தொலைத்தாய். அஃதன்றியும், பூம்புகார் நகரில் பார்ப்பனி ஒருத்தி, தான் வளர்த்தகீரிப்பிள்ளை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/36&oldid=1410959" இலிருந்து மீள்விக்கப்பட்டது