பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14◇ ராசீ



காட்டுவது போல யசோதை பக்கத்தில் நீல நிறத்தவன் கோல அழகில் ஞாலம் விளங்க அங்கு அவள் அணைப்பிற்குக் காத்து இருந்தான். யசோதை எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தாள். அவள் மார்பு தவம் செய்தது அவனுக்கு முலைப்பால் தருவதற்கு.

 கோகுலம் என்பது ஆயர் வாழ்ந்த சிற்றுார். பசு மேய்த்தலைத் தொழிலாகக் கொண்டு வளம் மிக்க வாழ்வை நடத்தினர். ஆயர் குலம் என்று அவர்கள் இன முத்திரை குத்திக்கொண்டு இருந்தனர். பாலும், தயிரும், நெய்யும் அவர்கள் பண்டப் பொருள்கள். நகர் வாசம் அறியாத நன்மக்களாக வாழ்ந்துவந்தனர். கோகுலத்திலேயே நந்தனின் வீடு நலம் மிக்கதாய் விளங்கியது. அவன் மீது நட்பும் நயமும் மதிப்பும் மற்றவர் காட்டினர். கண்ணன் பிறந்தான் என்பதில் அந்த ஊரே மகிழ்ச்சி கொண்டது. கலகலப்பும், ஆரவாரமும் விஞ்சின. நந்தகோபன் சுறுசுறுப்பாய் இயங்கத் தொடங்கினான். அவன் வீட்டுக்கு வருவாரும் போவாரும் மிகுதியாயினர்.

கம்சன் மனநிலை

 வாண வேடிக்கை கண்டதுபோல் இருந்தது கம்சனுக்கு. மின்னுக்கொடிபோல் பெண்ணொருத்தி தோன்றியதும், கண்ணெதிரே நின்று அவனை மருட்டியதும், அவன் கொல்லப்படுவது உறுதி என்று கழறியதும் அவன் கவலையை மிகுவித்தன. அவள் விண்ணில் மறைந்தாள்.
 வியப்பும் திகைப்பும் அடைந்த அவன், தன் வாழ்க்கை நகைப்பிற்கு இடம் ஆகிவிட்டதே என்று நைந்தான். பறவை பறந்துவிட்டது என்பது தெரிந்தது. மாயை தன்னை வெருட்டியது கண்டு வியந்தான். கண்ணன் தன் சிறையில் பிறந்தான் என்பதும், அவன் இடம் பெயர்ந்தான் என்பதும் அவன் அறியான்; ஆனால்,