பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇15



தன்னைக் கொல்ல வந்தவன் களம் வேறு அமைத்துக் கொண்டான் என்பது மட்டும் சொல்ல முடிந்தது.

 முளையிலே களையாவிட்டால் அது முற்றிய மரம் ஆகிவிடும். அதனால் வளையிலே இருந்தாலும் அவனை வளைத்துப் பிடிப்பதே இனி விளைவிக்கும் செயல் என்பதைக் கருத்திற் கொண்டான்.
 அமைச்சர் அவை என்று அவன் அமைத்துக் கொண்டது இல்லை; நமைச்சலுக்குக் கீறிவிடும் நச்சரிப்பினர் சிலர் அவனுக்கு நண்பர்களாய் இருந்தனர்; எதற்கெடுத்தாலும் சரி எனப் பாடும் சங்கீத வித்துவான் களாக இருந்தனர்; மூளை குறைந்தவர்கள்; உடலை வளர்த்து வைத்திருந்தார்கள்.
 "நீ சொல்வது சரி, அவன் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து விடலாம்" என்றனர் சிலர்.
 "ஒரு குழந்தை என்ன? ஒராயிரமும் கொன்று முடிக்கலாம்"

என்று சிலர் குரல் கொடுத்தனர்.

 "பிறந்து பத்து நாள் ஆகி இருந்தால் அது பத்தாவது நாளைக் கடக்கக் கூடாது; முடித்துவிடுங்கள்" என்றான் கம்சன், "அதற்குமுன் பிறந்தவை அதிருஷ்டசாலிகள்: அவற்றை விட்டு விடுங்கள்" என்று திருத்தம் கூறினான்.
 “விளம்பரம் இல்லாமல் இந்த வியாபாரத்தைத் தொடருங்கள்" என்று சொல்லி அனுப்பினான். அடியாட்களுக்கு அவனுக்குப் பஞ்சம் இல்லை. கச்சிதமாக முடித்துவிட்டு நிச்சயமாகத் தன்னிடம் வந்து சொல்வார்கள் என்று எதிர்பார்த்தான்.
 "பூதனை என்ற ஒரு பேய்க்குணம் படைத்த அசுர மகள் ஒருத்தி சாதனை செய்து காட்டுவாள்" என்று பேசிக் கொண்டிருந்தனர். அவளையே அவன் முதற்கண் தேர்ந்து அனுப்பி வைத்தான்.