பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ◇ ராசீ


களையும் சடங்குகளையும் நம்பி அவற்றையே உய்தற்கு வழி என்று தவறான பாதையில் சென்றனர். முழுமுதற்பொருள் நேரில் வந்தும் அவர்களால், தாமே அமைத்துக்கொண்ட எல்லைகளைக் கடக்க முடியாமல் நின்றுவிட்டனர்.

கோவர்த்தன கிரிதாரி

கோவர்த்தன கிரி அவர்களுக்கு மேய்ச்சல் நிலமாகப் பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். அங்கே ஆயர்கள் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு சென்று கொண்டிருந்தனர்.

"எங்கே போகிறீர்கள்?" என்று கேட்கப், "பொங்கல் இட, இந்திரனுக்கு வழிபாடு செய்யச் செல்கிறோம்" என்றனர்.

"ஞாயிறு, திங்கள், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம்; இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறது” என்றான் கண்ணன்.

"மழைக்கு வருணன் தலைவன்; அவனுக்கு இந்திரன் தலைவன்; அதனால் அவனை வழிபடுகிறோம்" என்றனர் ஆயர்கள்.

"பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம்; செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா” என்று கேட்டனன் கண்ணன்.

அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக் கொண்டனர் எந்தத் தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத் தம் பசுக்களை மதித்து வழிபட்டனர்.

இந்திரன் இதனை அறிந்து சினம் மிகக் கொண்டான்; அவர்களை அடக்குவதற்காகக் கடுமையான மழை தொடர்ந்து பெயச் செய்தான். இடியும் மின்னலும் உடன் சேர்ந்தன. எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாடி வீட்டுக்கு ஓடிவிட முடியாது; அதனால், மழையால் நனைந்தனர்.