பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68◇ ராசீ



கொண்டுவந்து தந்தாள்; வருணனும் ஒரு தாமரை மாலையும், இரண்டு மேலாடைகளும் கொண்டுவந்து தந்தான். அவற்றை இடையிலும், தோளிலும் அணிந்து கொண்டான். இந்தப் புதிய ஆடைகளிலும், அணிகலன் களிலும் அவன் அழகிய தோற்றத்தோடு விளங்கினான்; கோபியரோடு கூடிக் குரவைக் கூத்து நிகழ்த்தியும் ஆடல் பாடல்கள் நிகழ்த்தியும் இரண்டு மாதம் இன்பமாய்ப் பொழுது கழித்தான்.

பின்பு நிதானமாகத் துவாரகாபுரிக்குத் திரும்பினான்; ரைவதன் என்ற அரசன் புதல்வியாகிய ரேவதி என்பாளை மணந்துகொண்டான். அவனுக்கு நிசிதன் என்றும், உன்முகன் என்றும் இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். கண்ணியமான போக்கும் சான்றாண்மையும் உடையவனாக நடந்துகொண்டதால் அவனை அனைவரும் மதித்தனர். கண்ணனும் அண்ணனை எப்பொழுதும் எதிர்க்காமல் மனம் கோணாமல் இயன்றவரை நடந்து கொண்டான். பலராமன் கண்ணனுக்கு எல்லாவகையிலும் துணையாக நின்று உதவினான்.

உருக்குமணி திருமணம்

கண்ணன் புகழ் காற்றில் செல்லும் கீதமாக நாற்றிசையிலும் பரவியது. நகரத்து அரசர்களின் மகளிர் அவன் மீது விருப்புற்று அவனை மணப்பதற்கு விழைந்தனர். அவர்களுள் ஒருத்தி உருக்குமணி ஆவாள்; அவள் மகளிருள் மாமணி, உண்மையைச் சொல்லப் போனால் கண்ணனை மகாவிஷ்ணு என்றால், அவள் தாமரைச் செல்வியாகிய திருமகளே ஆவாள்; இவனை மணப்பதற்காகவே மன்னன் மகளாகத் திருமகள் பிறந்து வளர்ந்தாள் என்று கூறலாம்.