பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇75



மாய வித்தைகளாலும் கொன்றான். பிறகு அவனை அழைத்துக்கொண்டு துவாரகை வந்து சேர்ந்தான். நேரே கண்ணனின் அரண்மனையில் வந்து இறங்கினான். கண்ணனே மற்றோர் வடிவில் வந்ததுபோல் அவன் அங்கிருந்தவர்க்குக் காணப்பட்டான். ருக்குமணி அவனைப் பார்த்ததும் "இவன் தன் மகனாகத்தான் இருக்க வேண்டு"மென்று சாயலாலும், தன் உள்ளுணர்வாலும் தெரிந்து கொண்டாள்; அவனை வரவேற்றுச் சேர்த்துக் கொண்டாள். மருமகளையும் வரவேற்று ஏற்றுக் கொண்டாள்; இழந்த தனம் மீண்டும் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. உருக்குமியின் வதம் உருக்குமணிப் பிராட்டிக்குப் பிரத்தியும்னனைத் தொடர்ந்து சாருதேஷ்ணன். சுரேஷ்ணன், சாருதேகன், சுதேணன், சாருகுப்தன், பத்திரசாரு, சாருவித்தன், சுசாரு, சாரு என்னும் ஒன்பது மகன்களும் சாருமதி என்னும் மகளும் உதித்தனர். காதலித்துக் கைப்பிடித்த மாயாவதியல்லாமல் தன் மாமன் உருக்குமியின் மகளையும் நேசித்தான்; அவளைச் சுயம் வரத்தில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். அதனால் இந்த இரண்டு குடும்பங்களுக்கும் நல்லுறவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரத்தியும்னன் மகன் அநிருத்தன் என்பவனுக்கு உருக்குமியின் மகன் வயிற்றுப் பெயர்த்தியை மணம் முடித்தனர். அம்மணவிழாவுக்குப் பல தேசத்து மன்னர்களும், நெருங்கிய உறவினரும் போஜகம் என்னும் உருக்குமியின் நகருக்கு வந்திருந்தனர்.