உலகம்
25
கண்ணாயிரத்தை அவன் அறைக்குள் அழைத்துச் சென்று, படுக்கையில் சாயச் செய்கிறான். மின் விளக்கைப் போடுகிறான் கருப்பன். போதையில் ஆள் அடையாளம் தெரியவில்லை, கண்ணாயிரத்துக்கு. எழுந்து நிற்கிறான், தள்ளாடியபடி. கருப்பனைப் பார்த்து மரியாதையாகக் கும்பிடுகிறான்.]
கண்.: (குளறியபடி) வரணும்! வரணும்! ஏது இந்தப் பக்கம்...இந்த நேரத்திலே...சௌக்கியந்தானா...குழந்தை குட்டிகளெல்லாம் சுகந்தானே.. எப்படி உங்களோட யோக க்ஷேமம்...கலியாணமெல்லாம் ஆயிட்டுதா?
[கருப்பன் திகைக்கிறான். கண்ணாயிரத்தைப் படுக்கவைக்க முயற்சிக்கிறான். சண்ணாயிரம், கருப்பனைக் கும்பிடுவதும், உட்காருவதும், குளறுவதுமாகவே இருக்கிறான்.]
கரு.: எஜமான்! நான்...நான்...கருப்பனுங்க...
கண்.: என்ன பிரதர்! நம்மை இப்படியா அவமானப் படுத்துவது? இரு பிரதர்! (என்று கூறி, அலமாரியைத் திறந்து, ஒரு பாட்டில் எடுத்துத் திறந்து டம்ளரில் ஊற்றிக் கருப்பனிடம் கொடுத்து...) சாப்பிடுங்க பிரதர் ! ஏ,ஒன்! சாப்பிடுங்க...
இதிலே என்ன பிரதர் கூச்சம்? சும்மா சாப்பிடுங்க...
நானும் இப்படித்தான் கூச்சப்பட்டேன், முதல்நாள். என்ன செய்தா தெரியுமா, மைலேடி...மைலேடி