உலகம்
37
சப்-இ: ஏண்டா! முழுப் பூசணிக்காயைச் சோத்திலே மறைக்கப் பார்க்கறே...கண்ணாயிரம் ரூமிலே காலையிலே கூட்டப்போனவ வீராயிதானே?
கரு: (கண்கலக்கத்துடன்) அவ ஒரு பாவமும் அறியாதவ. இந்தக் கடியாரம், நேத்து நடுராத்திரிலே இருந்து என்னிடம் இருக்குதுங்க.
இதையும் கைக்கடியாரத்தையும் கண்ணாயிரத்தய்யாவேதானுங்க எனக்குக் கொடுத்தாரு.
சப்-இ: சன்மானம் கொடுத்தாரா உனக்கு...ராஸ்கல்! தங்கச் செயின் போட்ட கடியாரத்தை...நீ பெரிய சீமான்...உனக்கு அவர் பரிசா.. கொடுத்தாரா?
இழுத்துக் கொண்டு போ, வீராயியை...
கரு: தொடாதே! தொட்டே கையை ஒடித்துவிடுவேன். அவ உத்தமி, படாத பாடுபட்டு குடும்பத்தை நடத்திச் செல்கிற குணவதி, தான் பட்டினி கிடந்தாவது இந்தப் பாவியைக் காப்பாத்திய புண்யவதி. பிறர் சொத்துக்கு ஒருநாளும் அவ ஆசைப்படமாட்டா. உழைப்பு, உழைப்பு, உழைப்பு...என்னைக் கணவனாகக் கட்டிக்கொண்ட நாளா ஓயாத உழைப்புதான். ஒரு சுகமும் கண்டதில்லே! ஐயா! என் பேச்சிலே உங்களுக்கு நம்பிக்கையில்லையா? சரிய்யா...நம்ப வேண்டாம்...சொத்துக் கிடைச்சுப் போச்சு! திருட்டுப்பட்டத்தை ஒத்துக்கொள்ளவும் ஒரு ஆள் தானே தேவை. நான் இருக்கிறேன். இழுத்துக்கிட்டுப்போயி, அடியுங்க—உதையுங்க-ஆறுமாசம் ஜெயில்லே தள்ளுங்க. ஆனா, அந்த உத்தமியை மட்டும் ஒண்ணும் செய்யா திங்கய்யா... என்னாலே அவபட்ட கஷ்டம் போதும்யா...இந்த அவமானம் வேண்டாம்...அவளுக்கு வேண்டாமய்யா, அவளுக்கு வேண்டாம்...