இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
கண்ணாயிரத்தின்
இருக்கிறான்...எடு வாடகைப் பணத்தை. நானும் பொறுத்துப் பார்த்தாச்சி...இனி பணம் வாங்காமெ இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்...ஆமாம்...
கரு: (அலட்சியமாக) எவ்வளவய்யா வாடகை பாக்கி?
வீட்டு: பதினெட்டு ரூபா...
[கருப்பன் அலங்காரப் பையை ஒருபுறம் வைத்து விட்டு எழுந்திருக்கிறான்; மடியிலிருந்து கடிகாரம் கீழே விழுகிறது. வீராயி ஆச்சரியமடைகிறாள்; மறுகணம் திகிலடைகிறாள்.]
வீராயி: (திகிலுடன்) அடப் பாவி மனுஷா! இந்த வேலையும் ஆரம்பித்துவிட்டாயா? கடிகாரம் சின்ன எஜமானருடையதாச்சே!
[வாயைப் பொத்திக் கொள்கிறாள், பயத்தால். அவள் பேசி வாய்மூடு முன்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைகிறார். கருப்பனிடமிருந்து கைக்கடியாரத்தைப் பறித்துக் கொள்கிறார். உடன் வந்திருந்த கான்ஸ்டபிளிடம்...]
சப்-இ: 'கரெக்டா' சொன்னார், வீராயிதான் திருடி இருப்பான்னு! சரியான சமயத்திலேதான் வந்தோம்.
வீராயி: (கலக்கத்துடன்) ஐயய்யோ! சாமி! நான் திருடலிங்க... சத்யமாச் சொல்றேன்.
[வீட்டுக்காரர் மெள்ள நழுவி விடுகிறார்]
சப்-இ: (மிரட்டும் குரலில்) கையும், மெய்யுமாகப் பிடிப்பட்ட பிறகுமா பொய் பேசறே...நட, ஸ்டேஷனுக்கு...
[வீராயி பதறுகிறாள்; கருப்பன் கலங்குகிறான்.]
கரு: சாமி! அவ அப்படிப்பட்ட நடத்தைக்காரி இல்லிங்க... எத்தனையோ வருஷமா...வேலை பார்க்கறா...தப்பு தண்டா கிடையாதுங்க...நடந்ததே வேறேங்க...