உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கண்ணாயிரத்தின்

இது வெறும் கோயில் மட்டுமல்ல, நாடியா ! இது ஏழைகளின் சுவர்க்கம்—இங்கு அனாதை விடுதலை பள்ளிக்கூடம், தர்மசத்திரம், மருத்துவமனை...என்னென்னமோ திட்டம் என் மனதில். ஆண்டவன் அருளால் உன் உதவி கிடைத்து விட்டால், என் எண்ணம் ஈடேறிவிடும்.

மொத்தத்தில் பத்து இலட்சம் செலவிடத் திட்டம். ஆமாம், நாடியா! அவ்வளவும் என் ஒருவனாலே ஆகுமா? அதனால் இதற்குப்பல புண்ணியவான்களின் பணமும் தேவை; கிடைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்க உதவியும் கிடைக்கிறது.

அதோ பார்! ஒரு சிற்பி, நந்தி சிலையைச் செதுக்கிக் கொண்டிருக்கிறானே, அவனுக்கு மட்டும் மாதம் முன்னூறு ரூபாய். அவனுக்குத் துணையாகப் பதினெட்டு பேர்கள்.

மொத்தத்தில் இந்தத் தர்ம காரியத்தில், நாடியா! ஐநூறு பேர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெருஞ் செலவும் நான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சர்க்கார் உதவி, செல்வவான்களின் நன்கொடை, பக்தர்களின் காணிக்கை இவ்வளவும் திரண்டு கிடைத்தால் தான் இந்தக் காரியம் நடைபெறும். என் பெயர், என் குடும்பப் பெயர் மீது ஒரு துளியும் 'மாசு' விழாதிருந்தால்தான், மதிப்பு குறையாது இருந்தால்தான், இந்தப் புண்ணிய காரியம் பூர்த்தியாகும். ஒரு சிறு கறை விழுந்தாலும் போதும். சிங்காரவேலர் இப்படிப்பட்டவர்தானா அவர் மகன் கெட்ட நடத்தைக்காரன்தானா என்ற பெயர் கிளம்பினால் போதும் நாடியா! இவ்வளவும் பாழாகும். மனிதர்களின் காரியம் மட்டுமல்ல, மகேசன் காரியம்கூட நாசமாகிவிடும். குடும்ப கௌரவம் கெடக்கூடாது என்பதிலே எனக்கு ஏன் அவ்வளவு அக்கறை என்பது புரிகிறதா? மதிப்பு மங்காதிருக்கவேண்டும்; அந்த மதிப்பின் மீதுதான் நம்பிக்கை எழுகிறது; அந்த நம்பிக்கை நொறுங்கினால், இந்தத் தேவாலயமே நொறுங்கிப் போகும். உன் ஒரு வார்த்தையில் இருக்கிறது, இந்தப் புண்ய ஸ்தலத்தின் எதிர்காலம்.