பக்கம்:கண் திறக்குமா.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

கண் திறக்குமா?

செய்ய முன் வருவாரா என்று வேறு எண்ணி எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன். அவரோ நீட்டிய நோட்டை நீட்டியபடி இருந்தார். எனக்குப் பரிதாபமாக இருந்தது. ரொம்ப வந்தனம், சென்னை போய்ச் சேருவதற்கு இந்த டிக்கெட் ஒன்றே போதும்!' என்றேன். அதற்குள் மணி அடித்து விடவே எல்லோரும் வண்டியை நோக்கி ஓடினர். இந்தச் சமயத்தில்தான் நான் கொஞ்சமும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, என்னையும் தம்முடன் வண்டியில் ஏறிக்கொள்ளும்படி இவர் வற்புறுத்தவில்லை; பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டுவிட்டு அவசர அவசரமாக நாலைந்து சாத்துக்குடி பழங்களை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டு, 'எழும்பூர் ஸ்டேஷனில் உங்களைச் சந்திக்கிறேன்' என்று இரைக்க இரைக்கச் சொல்லிவிட்டு, விழுந்தடித்துக் கொண்டு போய் அடுத்த பெட்டியில் ஏறிக் கொண்டார். எனக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது; 'இப்படியும் ஓர் ஆண் பிள்ளை உண்டா!' என்று வியந்தேன். அத்துடன், அவர்மேல் அதுவரை கொண்டிருந்த தப்பபிப்பிராயத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன்..."

"சரிதான்; கடைசியாக உன் உள்ளத்தில் அவருக்குக் கொஞ்சம் இடங்கொடுத்து விட்டாயாக்கும்?" என்றேன் நான் குறுக்கிட்டு.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை, அண்ணா! பெண்கள் அல்வளவு சீக்கிரம் இடங்கொடுத்துவிட மாட்டார்கள்; ஆண்கள்தான் பெண்களைக் கண்ட மாத்திரத்தில் இடங்கொடுத்து விடுவார்கள்!" என்றாள் அவள்.

"சரி, அப்புறம்?"

"அப்புறம் என்ன, மறுநாள் காலை என்னை அவர் எழும்பூர் ஸ்டேஷனில் சந்தித்தார். அங்கிருந்து ஒரு டாக்ஸியில் என்னைக் கொண்டு வந்து இங்கே சேர்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/153&oldid=1379219" இலிருந்து மீள்விக்கப்பட்டது