பக்கம்:கண் திறக்குமா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

கண் திறக்குமா?


"கண்ணன்" என்றார் அவர்.

"சரியான திருடன்தான்!" என்றேன் நான்.

அதற்கு மேல் அவர் அங்கே நிற்கவில்லை; 'விட்டால் போதும்!' என்று தடையைக் கட்டிவிட்டார். நான் சிரித்துக்கொண்டே திரும்பினேன்; சித்ரா முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள். விடுவேனா நான்?

"கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்,
கண்டுவர வேண்டுமடி தங்கமே தங்கம்!
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்

ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்!"

என்ற பாரதியாரின் பாடலைத் திருப்பித் திருப்பிப் பாட ஆரம்பித்துவிட்டேன். சித்ரா வராத கோபத்தை வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டு, "ரொம்ப நன்றாய்த் தான் இருக்கிறது!" என்றாள், அறையை விட்டு அம்பலத்துக்கு வந்து.

"ஏன், கண்ணன் பாடினால் தான் நன்றாயிருக்குமோ!" என்றேன் நான்.

"ஆமாம், சாந்தினி பாடினால்தான் எனக்கு நன்றாயிருக்கும்!" என்றாள் அவள், பதிலுக்குப் பதில் விட்டுக் கொடுக்காமல்.

இந்தச் சமயத்தில், "என்ன விஷயம்?" என்று கேட்டுக்கொண்டே சாந்தினி உள்ளே நுழைந்தாள்; நான் நடந்ததைச் சொன்னேன்.

"இவ்வளவுதானே, நாளைக்கே வேண்டுமானாலும் நானும் அப்பாவும் போய் அவருடைய மன நிலையைத் தெரிந்துகொண்டு வந்துவிடுகிறோம்!" என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/155&oldid=1379223" இலிருந்து மீள்விக்கப்பட்டது