பக்கம்:கண் திறக்குமா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


7. 'காந்தி பவனம்'

லகம் எதையும் எப்பொழுதும் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருப்பதில்லை; அவ்வப்பொழுது அது மாறுதலை விரும்புகிறது. அந்த மாறுதலைச் சமயமறிந்து பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற விரும்பும் தன்னலக்காரன் எவனுக்கும் வெகு சீக்கிரத்தில் அது தலை வணங்கி விடுகிறது!

ஆனால் பாரிஸ்டர் பரந்தாமனின் மாறுதலுக்குக் காரணம் உலகமா, அல்லது அவரா என்று என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.

அடாடா! அவர் வசித்து வந்த அந்த 'விக்டோரியா பவ'னத்தைக் காணாமல் அன்று நான் தவித்த தவிப்பு இருக்கிறதே. ஆண்டவனுக்குக் கூட நிச்சயமாகத் தெரியாது - எனக்குத்தான் தெரியும்.

ஆம், பாரிஸ்டர் பரந்தாமன் மாறித்தான் போயிருந்தார். ஆனால் அவர் மட்டும் மாறியிருக்கவில்லை; அவருடைய வீட்டின் விலாசமும் மாறியிருந்தது.

அவருடைய பங்களாவின் முகப்புச் சுவரில் அன்று காணப்பட்ட 'விக்டோரியா பவனம்' என்ற கல்வெட்டை இன்று காணவில்லை. அதற்குப் பதிலாக, 'காந்தி பவனம்' என்ற கல்வெட்டு அங்கே காட்சியளித்தது.

'ஒருவேளை சாந்தி பவனமாயிருக்குமோ!' என்று நான் கண்ணைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்த்தேன்; கை விரலால் அந்த 'க' என்ற எழுத்தின் வரிவடிவத்தை ஒருமுறைக்கு இருமுறையாகத் தடவித் தடவிப் பார்த்தேன் - சந்தேகமேயில்லை ; 'காந்தி பவன'மேதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/75&oldid=1379633" இலிருந்து மீள்விக்கப்பட்டது