உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹ்யூகோவின் முதல் புத்தகம் வெளி வந்தது அவருடைய இருபதாவது வயதில். அது ஒரு கவிதைப் புத்தகம். அந்தப் புத்தகத்தின் மூலமாக அவருக்குப் புகழ் கிடைத்தது. கொஞ்சம் பணமும் கிடைத்தது. அந்தப் பணம் கிடைத்த பிறகுதான், அவர் திருமணம் செய்து கொண்டார். தமக்கு மனைவியாக வந்த அம்மையாரை, அவருக்குச் சிறு வயதிலிருந்தே நன்றாகத் தெரியுமாம். பிள்ளைப் பருவத்திலே இருவரும் ஒன்று சேர்ந்து ஓடி, ஆடி விளையாடியவர்களாம்!

திருமணம் ஆன பிறகு, ஹ்யூகோ பல நாவல்கள் எழுதினார். கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். அவர் எழுதிய பல நாடகங்கள் மேடையில் நடிக்கப் பெற்றன. நாளுக்கு நாள் அவருடைய புகழ் ஓங்கியது.

ஹ்யூகோவுக்கு அப்போது நாற்பத்தோராவது வயது நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள், தலையில் இடி விழுந்தது போல், அதிர்ச்சி தரக் கூடிய துக்கச் செய்தி ஒன்று வந்தது. அவருடைய மகளும், மாப்பிள்ளையும் படகில் சென்ற போது, படகு கவிழ்ந்து, இருவரும் இறந்து விட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி! அன்று அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. துக்கத்தால் மனம் உடைந்து போயிருந்த அவர், சில காலம் எழுதுவதையே நிறுத்தி விட்டார். எழுதுவதை நிறுத்துவதால், இறந்தவர்கள் வரப் போகிறார்களா? மீண்டும் எழுதத் தொடங்கினார். புகழ் மேன்மேலும் பரவியது.

அரசியலில் ஈடுபட்டால், நாட்டுக்குப் பலவிதத்திலும் நன்மை செய்யலாம் என்று அவர் நினைத்தார்.

30