பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அயில்வேலன் கவி

பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அதே சமயத்தில் எல்லாவற்றுக்கும் மூலகாரணமாயிருக்கிற ஆண்டவனிடத்தில் நாம் மிக்க நன்றி பாராட்ட வேண்டும் அல்லவா? நாம் அவனுக்கு வேறு எவ்விதமாகக் கைம்மாறு செய்ய முடியும்? அவன் புகழைச் சொல்வதுதான் நன்றியறிவுக்கு அறிகுறி.
   "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
   பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு"
என்பது வள்ளுவர் வாய்மொழி. பொருள் சேர் புகழ் என்பதற்கு உண்மையான புகழ் என்பது பொருள்.

இறைவனுடைய புகழ்தான் உண்மையான புகழ். மற்றவர்களைப் புகழ்வது ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்காகத்தான். மற்றவர்களைக் கருவியாகக் கொண்டு எல்லாக் காரியத்தையும் யார் செய்கின்றானோ அவனைப் புகழ்வதே உண்மையான புகழ்ச்சி.

ஆகையால் எல்லோரையும் புகழ்வதற்குப் பதிலாக எல்லாவற்றுக்கும் மூலப் பொருளாகிய ஆண்டவனைப் புகழ்ந்தால், உண்மையை நாம் உணர்ந்து கொண்டவர்களாகவும் ஆவோம்; எல்லோரையும் புகழ்ந்ததாகவும் ஆகும். இதனை உணர்ந்து அப்பர் பெருமான் சொல்லுகிறார்.
   "பொன்னானாய் மணியானாய் போக மானாய்
   'பூமிமேல் புகழ்தக்க பொருளே' உன்னை
   என்னானாய் என்னானாய் என்னின் அல்லால்
   ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே!"

பொன்னாயும், மணியாயும், அவற்றால் ஏற்படுகின்ற போகமாயும் நீ இருக்கின்றாய். ஆகையால் பூமி மேல் யாரையாவது புகழ வேண்டுமென்றால் யாரைப் புகழ்வது? எல்லாம் நீயாகவே இருக்கின்றதனால் உன்னைத்தானே புகழ வேண்டும்? எந்த வகையைக் கொண்டு உன்னை நான் புகழ்வேன்? நீ எப்படி இருக்கின்றாய் என்று அறிந்தால்தானே புகழ முடியும்? உன்னை எப்படிப் புகழ்வது என்று எனக்குத் தெரியவில்லையே!” என்று பாடுகிறார். பல பல தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிய அப்பர் சுவாமிகள் நான் எப்படிப் புகழ்வேன் என்பாரானால், நாம் எல்லாம் என்ன சொல்வது?

91.